Farmer situation, article in this morning's Dhinamani by Selvam

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூவாயிரம் விவசாயிகள் இறந்தார்கள் என்று சென்ற ஞாயிற்றுகிழமை Indian Express நாளிதழ் வெளியிட்டது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது. இந்த செய்தியை (இது மதிய அரசின் கணக்கீட்டின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது), தமிழக அரசு நிராகரித்ததே தவிர, இதுவரை எப்படி இந்த எண்ணிக்கை வந்தது என்று யாருக்கும் கணக்கு சொல்ல தெரியவில்லை. இது சாத்தியமாக இருக்கும் என்று கூறும் விவசாய தலைவர்கள் கூட, யார் இந்த விவசாயிகள் என்று கூற இயலாத நிலையில் இருக்கின்றினர்.

இந்த தருணத்தில், இன்றைய தினமணியில், ஈரோடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர், திரு செல்வம் அவர்கள் எழுதியுள்ள கட்டுரை முக்கியாமானது, அனைவரும் கவனிக்கவேண்டியது.


அழுத பிள்ளைக்குத்தானே பால்?

ஆர். செல்வம்
First Published : 18 Jan 2011 12:55:14 AM IST

ஒன்றரை அடி உயரமும் 2-3 கிலோ எடையுடன் பிறந்த நம்மைத் தாய்ப்பாலுக்குப்பின் இப்போதுள்ள உருவத்துக்கு வளர்த்தவர்கள் விவசாயிகள்தானே? இந்த ஆழமான உண்மையைப் பாரதப் பிரதமர் முதல் கடைசிக் குடிமகன்வரை எல்லோரும் செüகரியமாக மறந்துவிடுகின்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங், விவசாயத் துறை வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும்; பசுமைப் புரட்சிக்குப் பின் புதிய தொழில் நுட்பங்கள் விவசாயிகளைச் சென்றடையவில்லை; விஞ்ஞானிகளுடைய கண்டுபிடிப்புகள் விவசாயிகளிடம் செல்ல வேண்டும், என்றெல்லாம் பேசுவாரா?

இவர் மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், திட்டக்கமிஷன் துணைத்தலைவர் அலுவாலியா, உணவு அமைச்சர் பவார் எனப் பலரும் இதே கருத்தை எதிரொலிக்கின்றனர். வேடிக்கை என்னவென்றால், விவசாய உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்று முழங்கும் மன்மோகன் சிங் அரசு ஒரு சந்தர்ப்பத்தில்கூட விவசாயிகள் வாழ்வு எப்படியுள்ளது என்றோ, விவசாயிகள் வருவாய் எவ்விதமுள்ளது என்றோ பேசியதில்லை.

அரசு மட்டுமல்ல, இந்தியாவிலுள்ள எந்த விவசாயப் பல்கலைக்கழகங்களும் விவசாயத் தற்கொலைகள் பற்றி விவாதிக்கவில்லை. ஒரு பல்கலைக்கழகம்கூட தன் சொந்தக்காலில் நின்று தற்சார்பில் வாழ்ந்த விவசாயிகள் வாழ்வு ஏன் இப்படிச் சிதைந்துபோனது என்று ஆராயவில்லை.

ஆங்கிலேயரின் சுரண்டல், அடிமை ஆட்சியின்போது விளைந்ததில் பெரும் பகுதியை வரியாகப் பிடுங்கிக் கொண்ட போதும்கூட நிகழாத அளவிலான தற்கொலைகள் கடந்த பத்தாண்டுகளில் மட்டும் ஏன் நிகழ்ந்திருக்கின்றன என யாரும் யோசிக்கக்கூடத் தயாராக இல்லை. இந்த அவலத்தைப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்கூட அலசவில்லை.

இது போன்றதொரு அவலம் - இதில் நூறில் ஒரு பங்கு அவலம் தொழில் துறையிலோ, சேவைத் துறையிலோ நிகழ்ந்திருந்தால் அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல்பக்கச் செய்தியாகி இருக்கும். தொலைக்காட்சிகளில் முக்கிய நேரத்தில் விவாதப் பொருளாகியிருக்கும்.

உணவுதானே, இவர்கள் தராவிடில் இறக்குமதி செய்து கொள்ளலாம் என்ற எண்ணம்தான் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும். சில ஆண்டுகளுக்குமுன் அப்போதைய நிதியமைச்சர், இன்றைய உள்துறை அமைச்சர், ஈரோட்டில் நடந்த விவசாயிகள் மத்தியில் ஏன் நெல் போன்றவற்றை விளைவிக்கிறீர்கள்? ஏற்றுமதிக்கானவற்றை விளைவியுங்கள். உலகச் சந்தையில் நீங்கள் விளைவிக்கும் விலையைவிட மலிவான விலையில் உணவு தானியங்கள் கிடைக்கின்றன என்றார். உண்மையில் அது அவரது குரல் அல்ல. இந்தியத் தொழில் அதிபர்களின் குரல். அந்த அதிபர்களின் அமைப்பு அன்றைய இந்தியப் பிரதமரான வாஜ்பாயிடம் சொன்னது, இந்தியாவின் தேசிய வருவாயில் விவசாயிகளின் பங்கு 22 சதமாக உள்ளது. அரசு அவர்களுக்குச் செலவிடும் அளவோ 60 சதமாக உள்ளது. ஆகவே, அவர்கள் எண்ணிக்கையை 25 சதமாகக் குறைக்க வேண்டும் என்று.

அந்த அமைப்பின் மற்றொரு குரலையும் அவர் பிரதிபலித்தார். 25 சத விவசாயிகள் மட்டும் விவசாயத்தில் இருங்கள். பிறரெல்லாம் வெளியேறுங்கள், விலகுங்கள், என்பதே அது.

விலகுங்கள் என்றால் விவசாயத்திலிருந்து விலகினாலும் சரி, பூமியிலிருந்து விலகினாலும் சரி, விலக வேண்டும். அதனால்தான் விவசாயிகளின் தற்கொலைகள் சாதாரணமானதாகப் பார்க்கப்படுகிறதோ?

தங்கள் உயிரைக் காக்கும், உடலை வளர்க்கும் விவசாயிகளின் அகால மரணங்களை ஏன் தடுக்கவில்லை என்று மற்ற துறைகளில் உள்ள படித்த கூட்டம் - ரயில் தாமதம், மின்வெட்டு என்பதற்கெல்லாம் பத்திரிகைகளுக்குக் கடிதம் எழுதும் படித்த வர்க்கம் - கேட்டிருந்தால் நன்றியுள்ளவர்களாக இருந்திருப்பர். விவசாயிகள் நிலையும் சற்றே திருந்தியிருக்கும். தங்களது உணவு எப்படி விளைகிறது? எத்தனை பேரின் வியர்வை, ரத்தத்தால் ஆனது, நம் உணவானது தொழிற்சாலைகளால், கம்பெனிகளால், இடைத்தரகர்களால், சமயங்களில் அதிகாரிகளால் எத்தனை முறை சுரண்டப்பட்ட பின் நம் வயிற்றைச் சென்றடைகிறது என்பதை எல்லாம் யாரும் சிந்தித்துக்கூடப் பார்ப்பதில்லை. உணவு உருவாகும் வித்தை எந்தப் பாடப் புத்தகத்திலும் இல்லை. அக்பரும், அசோகரும் என்ன செய்தார்கள் என்பதைவிட விவசாயிகள் என்ன செய்கிறார்கள்? உணவு எப்படி உருவாகிறது என்கிற அறிவு தேவையற்றதாக உள்ளது.

ஏன் இந்த அவலம்? என்ன செய்தால் நல்லது. இதற்கு நோயின் மூலம் தெரியவேண்டும். நூற்றாண்டு கால விவசாயமும் வாழ்வும் கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் சிதைந்தது ஏன் என்ற நோயின் மூலக்கூறு தெரிய வேண்டும்.

கிராமப்புறப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் விவசாயம் செய்யப்போவதாகக் கூறும் மாணவ, மாணவிகள் 1 சதம்கூட இல்லை. மாடும், காடும் உள்ளது. படிப்பு ஏறாவிட்டாலும் பிழைத்துக் கொள்வான் என்று கூறிய 30 ஆண்டுகளுக்கு முந்தைய தந்தையர் ஒருவர்கூட இல்லை இன்று. அதனால்தான் பட்டிதொட்டியெல்லாம் ஆங்கிலப் பள்ளிகள். அங்கு பயில்வோரெல்லாம் விவசாயியின் பிள்ளைகளே.

45 சத விவசாயிகள் விவசாயத்தைவிட்டு ஓட விரும்புகிறார்கள் என விவசாயிகள் கமிஷனின் தலைவர் எம்.எஸ்.சுவாமிநாதன் குறிப்பிடுகிறார். சிறந்த பள்ளியில் "சிறந்த கல்வி கற்று விவசாயத்திலிருந்து ஓடட்டும் தன் பிள்ளை' என்ற மாற்றம் எப்படி நடந்தது?

எல்லாம் திணிக்கப்பட்ட ஒன்று. ஜான் பெர்கின்ஸ் தன்னுடைய வேலை பற்றி ஒப்புதல் வாக்குமூலம்போல் எழுதிய "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' என்ற நூலைப் படித்தால் புரியும், எப்படியெல்லாம் திணிக்கப்படுகிறது என்பது.

திணிக்கப்பட்ட பசுமைப்புரட்சியைப் பற்றி பேசுவோரெல்லாம் நம் கண்முன் கொண்டுவருவது கொல்கத்தா வீதிகளில் வற்றிய வயிறும், தோல் போர்த்த எலும்புடலுமாக செத்து மடிந்த 30 லட்சம் இந்தியர்களின் மரணத்தையே. இது போன்றதொரு பஞ்சம் வரக்கூடாது என்பதற்காகத்தான் பசுமைப் புரட்சி கொண்டுவரப்பட்டது என்று கூறுவார்கள். ஆனால், பஞ்சம் ஏன் நிகழ்ந்தது என்று எவரும் கூறுவதில்லை. கொத்துக்கொத்தாய் இந்தியர் செத்து மடிந்த அதேவேளையில் அதே கொல்கத்தாவின் துறைமுகத்திலிருந்து ஆங்கிலேய அரசு அரிசியையும், சர்க்கரையையும் கப்பல் கப்பலாக ஏற்றுமதி செய்தது உலக வர்த்தகத்துக்காக.

தனக்கென எதையும் வைத்துக்கொள்ள முடியாதபடி விளைந்ததையெல்லாம் பிடுங்கி லாபம் பார்க்கக் கப்பலில் அனுப்பியதால் நேர்ந்தது அந்தப் பஞ்சம். அது உலக அரங்கில் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டதை மறைக்கவே ரேஷன் திட்டமும் வந்தது. ஒருவர் உயிரோடு இருக்க எவ்வளவு சக்தி தேவையோ அந்த அளவே உணவு தானியங்கள் வழங்கினர். இன்றும் அதே பார்வைதான்.

சாவைக் காட்டியே இன்சூரன்ஸ் தொழிலும், ஆங்கில மருத்துவக் கம்பெனிகளும் வாழ்வதைப்போலவே, கொல்கத்தா பஞ்சத்தைக் காட்டியே விவசாயக் கம்பெனிகளும் அவர்களுக்கான விஞ்ஞானிகளும் வாழ்கிறார்கள். இவர்கள் வாழ்க்கையை ஓட்ட விவசாயிகளின் தற்கொலைகள் அவசியமாகிவிட்டது.

இந்த நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் விளைச்சலை அதிகப்படுத்த வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடியுங்கள் என்கிறார். அவர் உள்ளிட்ட பெரும்பாலானவர்களுக்கு ஓர் உண்மை பிடிபடவில்லை. வைப்புத் தொகையை தீர்த்துவிட்டால் வட்டி கிடைக்காது என்பது தெரிந்த பொருளாதார மேதைகள் விவசாயத்திலும் அதுவே நடந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளவில்லை.

பயிர் வளர்ச்சியின் ஆதாரம், விளைச்சலின் முதல் மூலம், வளமான, உயிரோட்டமுள்ள விளைநிலம். அமெரிக்கக் கம்பெனிகளின் நலனுக்காகத் திணிக்கப்பட்ட இடுபொருள்களும், திணிக்கப்பட்ட தொழில்நுட்பங்களும் 10,000 ஆண்டுகாலம் வளமிழக்காமல் இருந்த நிலத்தை சில பத்தாண்டுகளில் கிழடு தட்டச் செய்துவிட்டன. இன்று தமிழகம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் விளைநிலங்கள் வளமிழந்து மலட்டு நிலமாக உள்ளன. மொத்த வைப்புத் தொகையும் காலி. வட்டி வேண்டும், அதுவும் அதிகம் வேண்டும் என்கிறார்கள். இது எப்படிச் சாத்தியம்?

இப்போது நிலம் மலடாகிக் கொண்டுள்ளது என்பதும் அதற்கு ரசாயன உரங்கள்தான் காரணம் என்பதும் விவசாயப் பின்புலத்தில் உள்ள எம்.எல்.ஏ, எம்.பி.க்களுக்குத் தெரியும். ஆனால் இந்த உண்மையை உரைக்க மறுக்கிறார்கள். காரணம், மெத்தப் படித்த வேளாண் பல்கலையின் விஞ்ஞானிகள் சொல்வது தானே ஏற்கும் என்ற உணர்வு. நிதர்சனத்தைச் சொல்லி இதற்குத் தீர்வு கொடுங்கள் என்று உத்தரவிடும் இடத்தில் இருப்பவர்கள் இவர்கள். ஆனால், விஞ்ஞானிகளை ஆள அனுமதித்துவிட்டுத் தங்கள் அனுபவத்தை ஒதுக்கிவிட்டார்கள். தங்கள் பட்டறிவை, அனுபவ உண்மையை ஒதுக்கிவிட்டு விஞ்ஞானிகள் சொல்வதை - ஏவலாளி சொல்வதைக் கேட்கும் நிலையில் உள்ளனர்.

இந்தியா போன்றதொரு, 110 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு தனது விவசாயிகளைக் கொன்றொழித்துவிட்டுக் கம்பெனிகள் மூலம் மக்களுக்கான உணவைப் பெற முடியாது. தனக்கான உணவைக் கையேந்திப் பெற முடியாது. சுதந்திரமாக இருக்க முடியாது. நம் விவசாயிகள் பிற தொழிலில் உள்ளவர்களைவிட கெüரவமாக வாழ வழி செய்ய வேண்டும். அதற்குத் தேவை மேலோட்டமான நடவடிக்கைகள் அல்ல. வேளாண்மைத் திட்டங்களில் அடி முதல் நுனி வரை மாற்றம் தேவை. பார்வையில் மாற்றம், சிந்தனையில் மாற்றம் தேவை, மக்கள் மீதான ஆத்மார்த்தமான அக்கறை தேவை.

இந்திய விவசாயிகளுக்காகப் பரிந்து பேச, அவர்களது பிரச்னைகளை நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும், மக்கள் மன்றத்திலும் விவாதிக்க யாருமில்லையே, ஏன்?

எல்லாம் வரும். எல்லாம் கிடைக்கும். என்ன சொல்லி என்ன, அழுத பிள்ளைக்குத்தானே பால்?

Comments

Popular Posts