Photo on TN Places

Saturday, February 18, 2017

தமிழகத்தை ஆட்கொண்டுள்ள ஊழல் நோய்...உங்கள் வீட்டில் புற்றீசலாய், உணவில் புழுவாய், காற்றில் மாசாய், கண்  பார்க்கும் இடத்தில் எல்லாம் வீசி எறியப்பட்ட குப்பையாய், தமிழகத்தை ஆட்கொண்டுள்ள ஊழல் நோய். இன்று நடந்த ஜனநாயக அநீதியை கண்டு கொதித்தெழும் மக்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டிய 10 விஷயங்கள் -

1. அ. இ. அ .தி. மு. க. கட்சியை கடந்த ஆண்டு, இப்போது ஊர்ஜிதப்பட்டுள்ள தீர்ப்பு வழங்க பட்ட பின்னர்தான் நாம் தேர்ந்தேடுத்தோம். அப்போது நமக்கு இத்தகைய கோபம் ஏன் வரவில்லை?

2.  தனி நபர் பிம்பங்களுக்கு வோட்டு போட்ட நாம், எப்போதாதாவது வோட்டு வாங்கியவுடன் அந்த பிம்பம் மறைந்தால்  என்ன ஆகும் என்று சிந்திக்கவில்லை.

3.  இன்று ஒரு குடும்பத்தின் பிடியில் ஒரு கட்சி சேருவதை விரும்பாத நாம், நமது பல காட்சிகளிலும் குடும்ப பின்னணியிலேயே பலரும் தலைவராவதை என்றும் கண்டிக்கவில்லை.

4. நிலங்களையும், நீர் நிலைகளையும், தோட்டங்களையும், பல வணிக நிறுவனங்களையும், அடித்து நமது கண் முன்னே வாங்கும்போது கொஞ்சமும் அதை நாம் பெருகும் வன்முறை எனவும், அதனை தடுக்கும் விதத்தில் ஏதேனும் செய்யவேண்டும் எனவும் சிந்திக்கவில்லை, செயல்படவில்லை.

5. 300 ரூபாய்க்கு வோட்டு போட்டபோது இல்லாத சொரணை, 30 கோடிக்கு நமது எம்.எல்.ஏ. விற்கும்போது ஏன் வரவேண்டும். அல்லது அடுத்த நாட்களில் அதில் நமது பங்கு கிடைத்தவுடன் நிம்மதி அடைவோமா?

6. தமிழக மரபு என்று ஜல்லிக்கட்டுக்கு ஒன்று கூடி கோஷமிட்ட நாம் ஏன் நமது நமது தெரு பிரச்னைக்காகவோ, அல்லது ஊர் தேவைகளுக்காகவோ கோஷம் போட முயலவில்லை?

7.  இன்று ஜனநாயகத்திற்காக வெகுண்டு எழும் நாம் ஏன் நமது எம்.எல்.ஏ. க்களை கேள்வி கேட்கும் வழக்கத்தை கொள்ளவில்லை? நாம் இந்த பழக்கத்தை கொண்டிருந்தால், நமக்கு பதில் சொல்லவேண்டும் என்கின்ற பயம் அவர்களுக்கு கொஞ்சமேனும் இருந்திருக்கும் அல்லவா?

8. ஊழல் - நம்மில் எத்தனை பேர், நமது வேலைகளை சுலபமாக முடிக்க தேவையான ஊழல் பழக்கத்தை "கண்ணியமாக" கடை பிடிக்கின்றோம்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு நம்மால் ஊழல் அரசியல் வாதிகளை எதிர்த்து போராட முடியும்?

9.  ஊழல் வாதிகளின் ஆதிக்கம் நம்மை சுற்றி, நமக்கிடையே, வளரவிட்டு புலம்பும் நாம், அதனை எதிர்த்து நடக்கும் எத்தனை போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளோம்?

10.  நாளை மறுநாள் காலை நாம் இன்றைய கோபத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய போகிறோம்?

இந்த கேள்விகளை நாம் சிந்திக்க தவறினால், இன்றைய கோபம் பயனில்லாதது, பொழுதுபோக்கு.Sunday, February 12, 2017

The State we are not - தமிழகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு!

The State we are not - தமிழகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு! 

தமிழகத்தில் அசாதாரண ஏற்றத்தாழ்வு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது - மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வு இது.

சென்ற மாதம், தமிழக மக்கள் தங்கள் அரசியல் பக்குவத்தையும், நாகரிகத்தையும், அறவழி போராட்டத்தின் வாயிலாக  உலகமே வியக்கும் விதத்தில் நிரூபித்தனர். இன்று, கொஞ்சமும் அதற்க்கு சம்பந்தம் இல்லாத விதத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதுவும், பெரும்பான்மையை ஆட்சி அமைக்கும் விதத்தில் தேர்நதெடுக்கப்பட்ட எம். எல்.ஏ. க்கள், தங்கள் அரசியல் நாகரிகமற்ற தன்மையை வெளிக்காட்டுகின்றனர்.

இந்த நாகரீக ஏற்றத்தாழ்வினை எவ்வாறு அகற்றுவது என்பது தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். 
Monday, December 05, 2016

RIP J. Jayalalitha

MGRs legacy in tamilnadu politics is undeniable and prevalent till date. To beat all other claimants to that legacy and establish herself as the sole heir, to create a myth that equals MGR in several cases and surpassed his in some in endearing to masses, to compete in the highly male chauvinist Tamil political scene and make men spineless worms in front of her, to sustain the leader post among the most corrupt, clever and skullduggery politicos in the country, to stand up at times to the centre and vent the Tamil pride with clarity in continuation of a long established tradition, to sustain the benevolent State identity in tamilnadu and create newer schemes that caters to the populism and mass support, and to manage a party of such a large and diverse people and their priorities and preferences for over 3 decades - all these calls for a courageous, creative, complicated and control centric leader. She as a person will remain a mystery as hardly a small group ever was permitted to know her. Rest in Peace, JJ.

This is the end of the MGR saga.

Thursday, October 27, 2016

தீபாவளி லேகியத்தின் ரகசியம்!!


50 வருடங்களாக தொடர்ந்துவரும் பாரம்பரிய தீபாவளி லேகியம் 

rbs maniam
ரா. பாலசுப்ரமணியம் 
திரு.  பாலசுப்ரமணியம் அவர்கள், ஏறத்தாழ 50 வருடங்களுக்கும் மேல் தானே கடைக்கு சென்று மூலப்பொருட்களை வாங்கி, ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்னாள், வீட்டிலேயே அனைத்து மூலப்பொருட்களை அரைத்து, தீபாவளி லேகியம் தயாரிக்கிறார்.

அவர் ஒவ்வொரு ஆண்டும்  செய்யும் இந்த மருந்து எங்கள் குடும்பத்திலும், சொந்தங்களின் மத்தியிலும் மிகவும் பிரசித்தி. தீபாவளிக்கு பல வாரங்களுக்கு முன்பே, பலரும், "மாமா எனக்கு ஒரு டப்பா பார்சல்" என்று தொலைபேசியில் ஆர்டர் கொடுக்க துவங்கி விடுவார்கள்.

அவரது மருந்து பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கத்தை கீழே காண்போம் -

 மருந்து பொருட்கள் உள்ளடக்கம் - 
1. சுக்கு - 200 கி
2. மிளகு - 10 கி
3. அரிசி திப்பிலி - 10 கி
4. கண்டன் திப்பிலி - 10 கி
5. சித்தரத்தை - 10 கி
6. அதி மதுரம் - 10 கி
7. வால் மிளகு - 5 கி
8. வெள்ளை மிளகு - 5 கி
9. வாய் விளங்கம் - 5 கி
10. பறங்கி சக்கை -ஒரு சக்கை, ஆள்காட்டி விரல் நீளம்
11. நெல்லி முள்ளி - 10 கி
12. தனியா - 10 கி
13. வெந்தையம் - 5 கி
14. ஏலக்காய் - 5 கி
15. ஜாஜிக்காய் - 1
16. மாஜிக்காய் - 2
17. கடுக்காய் - 2
18. மராட்டி மொக்கு - 5 கி
19. கிராம்பு - சிறிதளவு (5)
20. கல்கண்டு - 100 கி
21. தேன் - 200 மில்லி
22. நெய் - 1 கிலோ
23. வெல்லம் - 1 கிலோ
24. விரலி மஞ்சள் - 1 துண்டு
25. ஜீரகம் - 2 தேக்கரண்டி
26. பெருங்காயம் - 1 துண்டு (5 கி)
27. வசம்பு - 5 கி
28. காய்ந்த ரோஜா இதழ் (பன்னீர் ரோஜா மட்டும்) - 50 கி
29. கசகசா - 10 கி
30. வெள்ளை கடுகு
31. ஓமம் - 10 கி

(மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து விற்கும் கடைகளிலும், மளிகை கடைகளிலும், தமிழகம் முழுவதும் எளிதாக கிடைக்கின்றன).

செய் முறை விளக்கம் -  நெய், வெல்லம், தேன், கற்கண்டு தவிர மற்ற பொருட்களை மிதமாக வறுத்து, அரைத்துக்கொள்ள வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வருத்தல் இந்த மருந்து தயாரிக்க அவசியம் இல்லை, அரைத்தலுக்கு  அவற்றை எளிதாக்கவே அவற்றை சூடாக்கும்வரை வறுக்க வேண்டும். அதிக வறுபட்டால், மருந்தின் தன்மை மாறிவிடும், ஆகையால் வருத்தல் என்பது வெறும் சூடாக்கும் வரை தான்.

வஸ்தரகாயம் - இது யாருக்கும் இன்று தெரியாத ஒரு வார்த்தை, அதாவது ஒரு வெள்ளை நைஸான வஸ்திரத்தை (வேட்டி துணி) வைத்து இந்த அரைத்த மருந்து பொருட்களை நன்றாக ஜல்லிக்க வேண்டும்.

இப்போது மொத்த மருந்து பொடி எந்த அளவிற்கு உள்ளது என்று அளவு பார்க்கவேண்டும். அவ்வாறு அளந்த மருந்துக்கு, ஒன்றரை அளவு பொடித்த வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும்.  முதலில் இந்த வெல்லத்தை நன்றாக கரையும் அளவு தண்ணீரில் கரைத்து, அதில் உள்ள கசண்டும், மண்ணு ஆகியவற்றை வடிகட்ட வேண்டும் (வெல்லத்தை காய்ச்சும்போது இவை கீழே தங்கிவிடும், அவற்றை நன்றாக வடிகட்ட வேண்டும்). இதற்க்கு பிறகு வெல்லத்திற்கு இன்னும் தேவையான அளவு தண்ணீர்  சேர்த்து, "கம்பி பாகு" வரும்வரை காய்ச்ச வேண்டும்.

கம்பி பாகு - வெல்லம் கொண்டு வீட்டில் பதார்த்தம் செய்வதற்கு, பாகு வைப்பது முக்கியம், அதில் பதம் பார்ப்பது ஒரு கலை. கம்பி பாகு என்பது, பாகை, கரண்டியிலிருந்து காய்ச்சும் பாத்திரத்தில் விட்டால், அது ஒரு கம்பி போல, தொடர்ந்து,  இடைவிடாமல் வரும் பக்குவத்திற்கு காய்ச்ச வேண்டும்.

இப்பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக மருந்து பொடியை இந்த வெல்ல பாகில் சேர்த்து, கட்டி தட்டாமல் கிளறிக்கொண்டே கலக்க வேண்டும். இது நன்றாக கலந்த பிறகு, இதனுடன் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கலக்க வேண்டும். நெய்யை அந்த மருந்து கலவை நன்றாக உறிஞ்சிக்கொள்ளும்.

லேகியத்தை பதம் - இப்போது தான் மிக முக்கியமான கட்டம், லேகியத்தை கையில் எடுத்து உருட்டினால், அது ஈஷாமல், ஒட்டாமல், திரண்டு வரவேண்டும். இது தான் சரியான பதம். இந்த பதம் வந்ததிற்கு பின்னர், நெய் சேர்ப்பதை நிறுத்திவிடவேண்டும்.
legiyam
தீபாவளி லேகியம் 

லேகியத்தை அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு, தேனையும், கற்கண்டையும் இத்துடன் கலக்க வேண்டும்.  இத்துடன் தீபாவளி லேகியம் தயார். நன்றாக ஆறிய பிறகு, அதனை காற்று புகாத நல்ல டப்பாவில் அடைத்து பாதுகாக்கவும்.

இவ்வாறாக தயாரித்த லேகியத்தை, மூன்று மாதங்கள் வரை வைத்துக்கொண்டு சாப்பிடலாம். தினமும் ஒரு சிறு நெல்லி அளவிற்கு, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மழைக்காலத்திற்கு எந்த உபாதைகளும் இல்லாமல் உடலை பாதுகாக்கும் வேலையை இந்த தீபாவளி லேகியம்  செய்கின்றது.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் அளவு செய்ய இந்த லேகியம் மிகவும் உதவியாக உள்ளது.  வயிற்று பிரச்சனை, சளி மற்றும் ஜுரம் இந்த மழைக்காலத்தில் நமது உடம்பில் எதிர்ப்பு சத்து அதிகம் இல்லாததால் எளிதில் பற்றிக்கொள்ளும், இந்த லேகியத்தை தினமும் உட்கொள்ளுவதினால் உடலின் நோய் எதிர்கொள்ளும் சக்தி அதிகரிக்கின்றது.

நமது மரபு, "உணவே மருந்து, மருந்தே உணவு" என்கின்றது.  இத்தகைய மூலிகை மருந்து வீட்டிலேயே தயாரிப்பதில் மூலம் நாம், நமது பாரம்பரிய அறிவு, மரபின் மாண்பு, மூலிகைகளின் பாதுகாப்பு, நமது உடல் ஆரோக்கியாம் ஆகியாவற்றிற்கு ஒரு  சேர பாதுகாக்கவும்,  நிலைநாட்ட முடியும்.

திரு. பாலசுப்பிரியமணியம் அவர்களின் சார்பிலும் நமது சார்பிலும் அனைவருக்கும் ஆரோகியமான தீபாவளி வாழ்த்துக்கள்!!!

"எங்களுக்கு பார்சல் அனுப்புவீங்களா", "செஞ்சி கொடுப்பீங்களா", என்ற கேள்விகளை தவிர்க்கவும். 

Sunday, July 17, 2016

"எனக்கு பயமா இருந்துச்சி"!!


"எனக்கு பயமா இருந்துச்சி" என்று ஒரு அரசு அதிகாரி கூறினால் அதற்கு "ஜாமீன் இல்லாமல் காவல் நீட்டிப்பு" நடக்கலாம் என்பது பியூஷ் மனுஷ் விஷயத்தில் அம்பலமாகியுள்ளது.

ஒரு ரோடு போடுவதை நிறுத்துவதற்காக, ஆக்கிரமிப்புகளை, தேவையான முன் அறிவிப்பின்றி அகற்றுவதற்காக தங்களை தாங்களே அந்த அகற்றுகின்ற இயந்திரத்துடன் இணைத்து கொண்ட ஆர்வலர்களை எப்படி ஒரு காவல் அதிகாரி, "இதனால் இங்கு வேலை செய்யும் அரசு அதிகாரிக்கு ஆபத்து ஏற்படும்" என்று கூறுகின்றார்?

இதனை கேட்ட ஒரு நீதிபதி எவ்வாறு, "ஆமாம், அப்படித்தான் தெரிகிறது, அதனால் ஜாமீனை மறுக்கிறேன்" என்று கூறுகிறார்?

இந்த சம்பவத்திலும், அதனை தொடர்ந்து இந்த வழக்கை போலீஸ் தரப்பிலும் அரசாங்க தரப்பிலும் நடத்தையை பார்க்கையிலே, இது பியூஷ்  என்கின்ற தனி நபரை குறிவைத்து ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது. கான்டராக்டருக்கு விட்ட ஒரு பணியில் அரசாங்க அதிகாரி என்ன செய்து கொண்டிருந்தார் என்பது முதல், அந்த அரசாங்க அதிகாரி தாக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லாத பட்சத்தில்,

தமிழகத்தில் ஏரிகளை தூர்வாரி அதனை சுத்தப்படுத்தி மக்களால் நினைத்தால் தங்களை தாங்களே காத்துக்கொள்ள இயலும் என்கின்ற நிதர்சனத்தை உணர்த்தும் விதத்தில் பணி செய்யும் பல இளைஞர்களின் ஹீரோ, பியூஷ். இவரது துணிச்சலும், துரித வேலைப்பாடும், மக்களை ஒன்று திரட்டி செயல் படுத்தும் விதமும் கடந்த சில வருடங்களில் பல முயற்சிகளை வெற்றிகரமாகி நிறைவேற்ற முடிந்துள்ளது. இவரை கண்டு பல இளைஞர்களும், தங்கள் பகுதியில் இவரை போன்றே வேலை செய்வதற்கு முயன்று வருகின்றனர். இன்று தமிழகத்தில் இளைஞர்களை வழிகாட்ட அரசியல்வாதிகளும், சினிமாகாரர்களும் தவிர வேறு யாரும் இல்லாத தருணத்தில், இவரது செயல்பாடுகளும், முயற்சிகளும், இளைஞர்களுக்கு உற்சாகமும், உத்வேகமும் அளித்துள்ளது. சமூக ஆர்வலர் மத்தியில் பியூஷ் செய்துவரும் ஆக்கப்பணிகள் மிகவும் மதிக்கத்தக்கதாகவும், மரியாதை அளிக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. இதனால் அவருடைய பணிகளுக்கு கடந்த 2 வருடங்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், மரியாதையும் ஏற்பட்டுள்ளது.

இவர் வேலைக்கு பல எதிரிகள் இருப்பது உண்மை. இன்று உண்மையாக மக்களுக்கு யாரேனும் உழைத்தால் அவருக்கு நிச்சியமாக மிகவும் அதிகாரமும், பணபலமும் படைத்த பலரும் எதிரியாக இருக்கவே வேண்டும். ஆனால், அவற்றை எல்லாம் விட முக்கியமாக கடந்த ஒரு மாத காலமாக, பியூஷ், ஒரு இளம் பெண்ணின் தற்கொலை குறித்த காவல் துறையின் அலட்சிய போக்கை கண்டித்து பல கூட்டங்களை ஏற்பாடு செய்தும், செய்திகளை வெளியிட்டும் வந்துள்ளார் என்பது, இதனால், காவல் துறை அவர் மேல் கடும் கோபத்தில் உள்ளது என்பதும் உண்மை. இதனாலேயே அவரை எந்த ஒரு விஷயத்திலேனும், உள்ளே தள்ளி "கவனிக்க" அவர்கள் முயன்றிருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

மிகவும் கண்டிக்கத்தக்க இத்தகைய போக்கை காவல் துறையினர் சராசரி மக்களின் உணர்வுக்கோ அல்லது நியாயத்திற்க்கோ எந்தவிதத்திலும் கட்டுப்படாமல், "நீதியின்" அனுமதியுடனும்,ஆசியுடனும் செயல் படுத்த முடியும் என்றால் மிகவும் வருத்தம் அளிக்கின்றது. இதை பார்க்கையில் ,தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து பல கேள்விகள் எழுகின்றன.

ஆனால், தமிழக போலீசார் மாத்திரமே காரணம் என்று நான் நினைக்கவில்லை.  

இன்று நமது மத்தியில் பசுமை போராளிகளை ஏதோ தேச துரோகிகளை போல் சித்தரிக்கும் போக்கு கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் ப.ஜா.கா. ஆட்சி வந்த முதல்நாளிலிருந்து துவங்கிவிட்டது. இதற்கு இந்த மத்திய அரசாங்கத்துடன் பல மிக சக்திவாய்ந்த பன்னாட்டு (இந்திய) கொம்பனிகளின் உறவு ஒரு முக்கிய காரணம். கிரீன்பீஸ் என்கின்ற உலகளாவிய பசுமை இயக்கத்தின் இந்திய அலுவலகத்தை முடக்க இந்த அரசு முற்பட்டது நாம் அறிந்ததே. இந்த நிறுவனத்தின், பிரியா பிள்ளை, பன்னாட்டு மாநாட்டிற்கு செல்வதை அனுமதிக்கவும் இந்த அரசாங்கம் அவரது பாஸ் போர்டை முடக்கியது நினைவிருக்கலாம். அதனை போலவே, நமது தமிழகத்தின் கடைக்கோடியில், இடிந்தகரையில் இன்றும் போராடிவரும் சாதாரண மக்களை, ஏதோ, இவர்களால் நாட்டிற்கும், இறையாண்மைக்கும் ஆபத்து வந்துவிட்டதுபோல் சித்தரித்து, அதற்கு, மறைந்த முன்னாள் ஜனாதிபதி, திரு. அப்துல் கலாம் போன்ற நல்ல மனிதர்களை கூட விட்டு வைக்காமல் நமது அரசாங்கங்கள்  பயன்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது. சமீபத்தில், பாதுகாப்பான உணவு குறித்து போராடிவரும், கவிதை குருகண்டி போன்ற ஆர்வலர்களைக்கூட சாடி, அவர்களது போராட்டங்களையும், அவர்களையும் குறிவைத்து பல ஊடக செய்திகள், பன்னாட்டு கொம்பனிகளின் ஆதரவாளர்களால், அதால் பயனடையும் சில, "ஊடக வல்லுனர்களும்" எழுதி வருகின்றனர்.

உண்மையில் இவர்கள் அனைவரும்,  இந்த நாட்டிற்கோ அல்லது நாட்டின் மக்களுக்கோ ஆபத்து வருவதை தடுப்பதைதான் தங்கள் பணி மூலம் செய்துவருகின்றனர். மற்றொரு காலத்தில் இத்தகைய மக்களை  நாடும், போற்றி, அவர்களை தலைவர்கள் என்று ஏற்றுக்கொள்ளும் என்றே தோன்றுகிறது. ஆனால் இன்று நமது கெட்ட காலம், கொள்ளை அடிப்பவனும், சாராயம் விற்பவனும், சூது செய்பவனும் தலைவன் என்றாகி விட்டபடியால், இவர்களை "எதிரிகள்" என்று நாடு சித்தரிக்கின்றது.

நமது பணி, "தர்ம கூச்சல்" ஓயாது செய்வது என்று இயற்கை விவசாய சிந்தனையாளரும் விவசாயியும் ஆன திரு. கோமதிநாயகம் அய்யா அடிக்கடி கூறுவார். ஆக்க பணி செய்பவர் யாவரும், தர்ம கூச்சல் போடுவதை நிறுத்தக்கூடாது. இன்று பியூஷ்ஐ  குறிவைத்து தாக்குபவர்கள், நாளை சாமான்ய மக்கள் பலரையும் இது போல தாக்க முற்படுவார்கள். ஒவ்வொரு முறை அவ்வாறு தாக்கப்படும் பொழுதும்,, சேர்ந்து நின்று, தாக்குதலை எதிர் கொள்ளுவதிலேயே, உண்மை நிலவும் என்று தோன்றுகிறது.

Thursday, July 14, 2016

Thugs, deccoits and tamilnadu private travel services...

The private travel agencies in tamilnadu after by far the most organiser thugs and decoits today. The staff are all thugs, the owners having discovered the online mode of tracking travelers preference and dynamically changing rates are decoits of the first order. The crew most often than not do their own private business in the side to earn extra bucks in carrying luggage with no clear papers. No one checks the crew in these buses. The air-condition buses and sleepers are the worst., they are shabbily maintained, they stink and their lights work randomly and unnecessarily to utter discomfort of the passengers.

Sunday, April 17, 2016

யாருக்கு வோட்டு போட வேண்டும்?யாருக்கு வோட்டு போட வேண்டும்?

என்னையும் மதித்து சிலர் இந்த கேள்வியை கேட்டுக்கொண்டுள்ளதால் மாத்திரமே இந்த பதிவு. இந்த தேர்தலை பொருத்தவரை தமிழ்நாட்டிற்கு எந்த பெரிய மாற்றமும் வரவாய்ப்பில்லை என்று நான் நம்புகிறேன். நான் இந்த தேர்தலை பற்றி பெரிதாக அக்கறையும் கொள்ளவில்லை. 

இரு துருவ கட்சிகளில் எந்த மாற்றமும் இல்லை. மூன்றாவதாக உருவாகியுள்ள அணியால், துருவக்கட்சிகளின் பணபலத்தின் முன்னாலும், புஜ பலத்தின் முன்னாலும் எந்த அளவிற்கு தாக்கு பிடிக்கமுடியும் என்று எனக்கு சந்தேகம் உள்ளது. அவர்களை தேர்தலில் முன்னாலும், பின்னாலும் எளிதாகவே பிரிக்கமுடியும் என்றே நான் நினைக்கின்றேன். நாங்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளவர்கள் குறித்து தேர்தலுக்குப்பின் பெரிதாக பேச ஏதும் இருக்குமா என்றே தெரியவில்லை. 

தமிழகத்தின் அரசியல் நிலையை குறித்து நாம் அனைவரும் வருந்தவேண்டும். சாதாரண மக்களின் வாழ்கைக்கு அறவே தொடர்பில்லாத ஒரு நிலையில் அரசியல் தலைவர்கள் தங்கள் சொந்த தொலைகாட்சி நிலையங்களில் அமர்ந்து நாட்டை ஆளும் நிலை தமிழகத்தில் உள்ள சராசரி பெரும்பாலானவர்களின் அறிவுக்கும், உழைப்பிற்கும் ஒரு அவமானம். ஏதோ ஆட்சியை தொலைகாட்சி நிகழ்சி போல நடத்திவிடுவதாக அவர்கள் விடும் ‘போட்டிக்கு போட்டி’ அறிக்கைகள் அறுவறுக்கும் விதத்திலும், கீழ்த்தரவாகவும் உள்ளன. இதனைகண்டு மக்கள், இந்த தேர்தலை ஏதோ ஊர் கூத்து போல் நினைத்து, அறிக்கைகளின் சொல் ஜாலத்தையும், படைப்புத்திறனையும் கண்டு வியந்து கைதட்டி கண்டுகளிப்பது, அவர்களது உள்ளத்தில் உள்ள கோபத்தின் உண்மை பிரதிபலிப்பு அல்ல. தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் முயற்சி என்றே நான் நினைக்கின்றேன். 

தமிழகத்தில் அடிமட்ட அளவில் அரசியல் மாற்றம் வரவேண்டும், அதற்கு மிக அதிக அளவில் அடிமட்ட அளவில் உணர்வுப்பூர்வமான மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றத்திற்கான வேலைகள் செய்வது அவசியம். இன்று பல இளைஞர்களால் இயக்கங்கள் உருவாகியிருப்பது மிகவும் முக்கியமான நிகழ்வு. ஆனால் அவர்கள் ஒரு தலைமுறையைதாண்டி சிந்திக்க வேண்டும், இன்று பல்வேறு இயக்கங்களை தோற்றுவித்தவர்கள் யாரும் என்றும் மந்திரிகளாகவோ, அல்லது முதல்வராகவோ ஆவது கடினம். அவர்கள் இதனை உணர்ந்து, இன்று 20களிலும், 30களிலும் உள்ள இளைஞர்களை ஊக்குவித்து அரசியல் அறிவு மற்றும் அடிமட்ட அளவிலான ஆக்கப்பூர்வமான வேலைசெய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்துவதுதான் முக்கியமான் தொண்டு. அடுத்த 15-20 ஆண்டுகளில் தமிழகத்தில் உண்மை அடிமட்ட மாற்றம் வரும் என்பதில் நான் மிகவும் நம்பிக்கையாக இருக்கிறேன். 

சரி, யாருக்கு வோட்டு போட வேண்டும்? 

உங்கள் தொகுதியில் ஒருவரேனும் அடிமட்ட அளவில் வேலைசெய்ய தகுதியானவராய் தெரிந்தால், அந்த நபருக்கு உங்கள் வோட்டை போடுங்கள், அவர் சுயெச்சையாகவே இருந்தாலும் பரவாயில்லை, வெற்றிபெர வாய்ப்பே இல்லை என்று நீங்கள் நினைத்தாலும் சரி. இல்லையேல் 49-0 விற்கு வோட்டு போடுங்கள், நாட்டில் அதிக அளவில் 49-0 போட்ட ‘பெருமை’யை தமிழக மக்கள் தமிழக அரசியல் கட்சிகளுக்கு தொடர்ந்து அளிக்கும் பாடமாகவேனும் அமையட்டும். முதல்முறை வோட்டு போடுபவர்கள் யாவரும், நிச்சியமாக பிறர் சொல்கேட்டோ, அல்லது, திரைப்பட நடிகர்களின் படத்தை பார்த்தோ வோட்டு போடுவதை தவிர்க்கவேண்டும். சுயமாக சிந்தித்து, தங்களுக்கு அடுத்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தகைய அரசியல் வேண்டும் என்று நிர்ணயித்து வோட்டு போட வேண்டியது அவசியம். 


ஆனால், காசுக்காக வோட்டு போடவோரை தயவுசெய்து கண்டிக்கவும். 

காசுக்காக வோட்டு போடுபவர்கள், அதற்கு பிறகு அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளைகுறித்து விமர்சிக்கும் உரிமையை இழந்து விடுகின்றனர். இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கிய திருப்புமுனை இந்த தமிழக தேர்தல். முன்பு ஒரு முறை, “திருமங்கலம் மாடல்” என்று காசுக்கு ஒரு தொகுதி வோட்டுகளை எவ்வாறு வியாபாரமாக்குவது என்று இடைத்தேர்தல் உக்திகளின் பாதாளத்தை காட்டிய பெருமை, தமிழகத்தை சேரும். இன்று ஒரு மொத்த மாநிலத்தின் தேர்தலை, வியாபாரமாக்கும் முனைவில் கட்சிகள் ஈடுபட்டுள்ள நிலையில், வியாபாரமாக்கப்படுவது வெறும் தனிமனித உரிமை மாட்டுமல்ல, அது, இந்திய இறையாண்மை என்பதை நாம் உணரவேண்டும். இந்த காசு மக்களின் வயிற்று எறிச்சலில் ஈட்டியது, இதனை வாங்கும்போது, சாதாரண மக்களின் சாபத்தையும் சேர்ந்து வாங்குகிறோம் என்பதை மக்கள் உணரவேண்டும்.