மாணவனை கொலைவெறிக்கு தூண்டும் கல்விதன்னை நிறுத்துவோம்!


மாணவனை கொலைவெறிக்கு தூண்டும் 'கல்வி'தன்னை நிறுத்துவோம்! 

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்க்கு வயது பதினைந்து தான் இருக்கும், அந்த வயதில், ஒரு மாணவனை கொலை செய்ய தூண்டும் அளவிற்கு கொடூரமாக நமது சமூகம் கல்விமுறையை அமைத்துள்ளது நாம் அனைவரும் வெட்கப்படவேண்டிய விஷயம்.

எப்படி இதை செய்கின்றோம்?
போட்டி நல்லது, போட்டியில் வெற்றி பெற்றால், பிற்காலத்தில் வாழ்க்கையில் வெற்றிபெறுவார், என்று அறிவுகெட்ட பெற்றோர்கள்

- "உங்கள் பிள்ளையை நாங்கள் போட்டிக்கு தயார் செய்வோம்" , என்று இறைவன் முதல், புட்டியில் அடைத்த தவிட்டு கசண்டு வரை எல்லாவற்றையும் விற்கும், வியாபார ஓநாய் கூட்டம்

நூற்றிற்கு நூறு, எங்கள் பள்ளியில் எல்லோரும் நூறு, மிக அதிகமாக நூறு,என்று மாணவர்களின் வாழ்க்கையை கேடுத்தேனும்  தங்கள் வியாபாரத்தை பெருக்கிக்கொள்ளும் பள்ளிகள் - இதையே தொடர்ந்து செய்து, நூற்றிற்கு நூறு பன்னாட்டு கொம்பனிகளுக்கு எங்கள் மாணவர்கள் விற்பனை ஆனார்கள், என்று பெருமை சாற்றிக்கொள்ளும் கல்லூரிகள் (இவை இரண்டையும் பெரும்பாலும் நடத்துவது அரசியல் வாதிகள் அல்லது அவர்களின் சொந்தக்காரர்களே) 

- இப்படிப்பட்ட பள்ளிகளும், வியாபார கூட்டமும், பெற்றோரும் ஒன்றிணைந்து நடத்தும் நாடகங்களில், தமக்கு வாய்ப்பு கிடைத்ததே என்று, கொஞ்சமும் கூச்சமில்லாமல், கலந்துகொண்டும், ஆதரித்தும், பெருமை பேசியும், தங்கள் சிறுமையை வெளிக்காட்டும் ஆன்மிகவாதிகள், புத்திஜீவிகள் மற்றும் சிந்தனையாளர்

- இவர்களின் இந்த மனப்போக்கையே வியாபாரமாக்கி, தினம் தினம் பறைசாற்றும்ஊடகங்கள்
 
இந்த நெருக்கடியில் சிக்கி தங்களின் உண்மை உணர்வை மறந்து / மறைத்து,  ஒவ்வொருநாளும், கூலிக்கு மாரடிக்கும் ஆசிரியர்கள் 

எப்படி உருப்படும் இந்த நாடு? என்று மாறும் இந்த கல்வி வெறி? "அறிவு" என்பதற்கு, "மெய்ப்பொருள் காண்பது" என்று உலகுக்கு கூறிய தமிழன், எவ்வளவு நாட்களுக்கு தன பிள்ளைகளுக்கு, "அறிவு = இன்றைய கல்வி முறை = பள்ளிக்கூடம் இஸ்கூலு போட்டி" என்று பொய் சொல்லி கொடுத்து வளர்ப்பான்? விளைவு? ஒவ்வொரு ஆண்டும், பள்ளி படிப்பு (பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம்) முடிக்கும் தேர்வுகள் முடிவு வெளிவரும் நாட்களில் நிச்சியமாக தற்கொலைகள் நடக்கின்றன,பெரிய பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பின்னர், அந்த படிப்பின் வேகமும், போட்டியின் அழுத்தமும் தாங்காமல் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர் (கடந்த ஆண்டு சென்னையை சேர்ந்த முக்கிய கல்லூரியில் நான்கு தற்கொலைகள்!).

அரசு பாடதிதங்கள் மாறி பல காலம் ஆகிவிட்டது. மாநில அளவில் அணைத்து  வகுப்பு அளவிலும், சித்திக்க வைக்க வேண்டும் என்று, "activity based learning" என்றும், "continuous assessment" என்றும் பல நவீன மாறுதல்களை ஏற்படுத்திவிட்டது. மதிய பாடத்திட்டமோ, இன்னும் ஒரு அளவு மேலே சென்று, சிந்தனை தூண்டும் கேள்விகளே இருக்கவேண்டும் என்றும், வெறும் மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் கல்வியை ஒழிக்க வேண்டும் என்று மாறிவருகின்றது. 

ஆனால் சமூகத்தின் போக்கு இதற்க்கு ஈடு கொடுக்கவில்லையே? ஒண்ணுமில்லாத "arts class" இற்கு இந்த கடையில், இந்த அளவிற்கு செலவு செய்து, இந்த பென்சிலையும், பேனாவையும், வாங்கிவந்தால் தான் ஆச்சி என்கின்றது பள்ளி, "ஏன்" என்று கேள்வி கேட்காமல், தலையாட்டி, தலைவணங்கி போகின்றது பெற்றோர் குழாம், இதையே தங்கள் பண பலத்தை காண்பிப்பதற்கு ஒரு சாக்காக கொண்டு, இன்னமும் 'உசத்தி' விஷயங்களை வாங்கி குவிக்கும் பெற்றோர்களே அதிகமாக தெரிகின்றார்கள்.  report இல்லை, rank இல்லை என்று சொன்னால் கூட, இந்த grade என்றால், எவ்வளவு மாற்கு இருக்கும்? எதற்கு மேல் யாரானும் மாற்கு வாங்கியிருக்கிறார்களா? என்று ஆராயும் பெற்றோர்களும் உண்டு. 

உண்மை நிலைமை கல்விதிட்டததை பொறுத்து இல்லை, இந்த பிரச்சனைக்கு, கல்வி திட்டத்தையோ அல்லது அரசாங்கத்தையோ குறை கூறி ஒன்றும் பிரயோசனம் இல்லை. இது ஒரு சமூக பிரச்சனையை. இன்னும் எவ்வளவு நாட்கள் "போட்டி" யை தலை மேல் தூக்கி ஆடி, அதன் ஆட்டத்தில், மதி இழந்து, காலில் சிக்கி மடியும் சிறு பிள்ளைகளின் வாழ்க்கைகளை பாராமல் செல்லுமோ இந்த தமிழ் சமூகம்.

இது தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் வருந்த வேண்டிய நாள், வெட்கப்பட வேண்டிய நாள். தலை நிமிர்ந்து, உலகுக்கு பாடம் சொன்ன தமிழ் ஆசிரியர்கள், என்று பெருமை படும் ஒரு சமூகம், இன்று, ஒரு மாணவனை, கொலை செய்யும் அளவிற்கு தூண்டுகின்றது என்பது வெட்கத்தின் உச்சகட்டம்! 

வரும் நாட்களில், ஆசிரியர்களில் பலர் இதுநாள் வரை அடக்கி வைத்துள்ள, மாணவர்களின் 'வன்முறை' போக்கை குறித்து விஷயங்களை வெளிபடுத்தலாம்...மறைந்த ஆசிரியை குடும்பத்திற்கு அரசு அனுதாப ஈடு தொகை வழங்கலாம், அந்த மாணவனை, ஏதோ தீர்ப்பு சொல்லி மன நல முகாமேல்லாம் கூட அனுப்ப வாய்ப்புள்ளது. ஆனால்,  போட்டியையும், பணபலத்தையும் நம்பி, உண்மை கல்வியை கைவிடும் இந்த சமூகத்தின் மன நலத்தை, எந்த முகாமில் இட்டு சென்று குணப்படுத்துவது?

---------------------------------------------------------------

வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை: மாணவன் வெறிச்செயல் 
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1202/09/1120209030_1.htm 
வகுப்பறையிலேயே மாணவர் ஒருவரால் ஆசிரியை குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாரிமுனையில் உள்ள புனித மேரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் இந்தி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் உமா மகேஸ்வரி. வயது 43. 


இன்று காலை வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது ஒன்பதாம் வகுப்பு படித்துவரும் முகமது இர்பான் என்ற மாணவன் ஆசிரியை உமா மகேஸ்வரியை கத்தியால் சரமாரியாகக் குத்தினான். பலத்த காயம் அடைந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே பலியானார்.

Comments

Popular Posts