தமிழகத்தில் பெருகிவரும் தற்கொலைகள் - யார் காரணம்?


கடந்த  சில மாதங்களாகவே தமிழகத்தில் தினமும் எங்கோ  கோடியில் ஒரு இளைஞர் அல்ல்து இளைஞி தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. இது மிகவும் வேதனைக்குரிய ஒரு நிகழ்வு. இவற்றிற்கு காரணம் என்ன? யாரெல்லாம் இவற்றிற்கு உடந்தை? என்று ஆராய அவசியமாகிறது.

1. தனிமைப்படுதல் - பெரும்பாலான தற்கொலை செய்து கொள்பவர்கள், தங்கள் குடும்பங்களிலும், சமூகங்களிலும், கல்லூரிகளிலும் தனிமையாக தங்களை கருதுவது. அத்தகைய தனிமையில் ஏதோ ஒரு சிறு தோல்வி ஏற்பட்டாலோ, அல்ல்து ஏற்பட்டுவிட்டதாக உணர்ந்தாலோ, அந்த இளைஞன் பேசக்கூட யாரையும் அணுகாமல், தற்கொலைக்கு தள்ளபடுகின்றான். சுய மதிப்பு மற்றும் வாழ்க்கையின் புரிதல் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இன்றைய படிப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், பெரும்பாலாரை ஆட்டிபடைக்கும் கலாசாரம் மற்றும் அதை சார்ந்த வாழ்க்கை முறை அனைத்தும், மனிதனை தனிமைபடுதுதலை தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது.

2. பிரிந்து விட்ட குடும்ப உறவுகள், ஒட்டாது பலதும் கேட்க்கும் நட்பு -  தனிமையில் துவழும் மனிதனை கண்டறிந்து, உற்சாகபடுத்தி, வாழ்க்கை நெறிகளை மெல்லமாக நினைவுபடுத்தி, அரவணைத்து செல்வது, நமது சமுதாயத்தில் குடும்பங்களும், உறவின் முறையும், அக்கம்பக்கம்  தொன்றுதொட்டு செய்து வந்துள்ளனர்.  இப்படிப்பட்ட கலாசாரத்தில் வளர்ந்தவர்கள், ஒரு சிறிய சமூகத்தை, அதில் தங்களுக்கு கிடைக்கும் ஆதரவை, சிறுவயதிலிருந்தே பெற்றும், பங்கேற்றும், அளித்தும் வருகின்றார்கள்.

ஆனால், இன்று பொருளாதார முறை, முதலில் குடும்பங்களை பிரிக்கின்றது, பிறகு உறவு முறைகளின் மத்தியில் நாம், நமது அறிவுத்திறனையும், செல்வதையும், செல்வாக்கையும் எவ்வாறெல்லாம் பகட்டு கௌரவத்தை பேணுவதற்காக உபயோகிக்க வேண்டும் என்று நமக்கு கற்பிக்கின்றது. ("மாமனார் / மச்சான் / மாப்பிள்ளை வீட்டுக்கு போகுணும், புதுசு போட்டுகொண்டு / வாங்கிகொண்டு  போகணும், கொஞ்சம் கைமாத்தா வேணும்..." என்று எவ்வளவு பேர் தலைசொரிவத்தை தினம் தினம் பார்கின்றோம்).  இதைக்கண்டு பயந்தே உறவுகளை ஒதுக்கிவிட்டவர்கள் சிலர், பகட்டிற்கு ஒத்துவரவில்லை என்று உறவுகளால் ஒதுக்கப்பட்டவர்கள் பலர். இத்தகைய குடும்பங்களில் உள்ள இளைஞர்களுக்கு, உறவுகளின் பிடிப்போ, சிறிய வயதில் அறியவேண்டிய மாற்றோர்பால் பரிவோ, ஆதரவோ தெரியாமலேயே வளர்ந்து விடுகின்றனர். அதனால், 'எல்லாம் எனேக்கே' அல்லது, 'எல்லாம் என்னிடமிருந்து பிரிக்கப்பட்டது' என்கின்ற மனோபாவம் வளர்கின்றது.

முன்பொரு காலத்தில் நண்பர்கள், உறவுகளின் பங்கை நிரப்பி வந்தனர், ஆனால் இப்போது, நட்புகளும் மிக சொற்ப காலமே மலர முடிகின்றது. எல்லோரும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை வெவ்வேறு ஊர்களில்  வேலை மாற்றி கொண்டு போகும்போது, நட்பிற்கும், அதனால் ஏற்படக்கூடிய உறவிற்கும் கூட நேரமில்லை. மற்றொரு விதமான நட்பை அதிகம் பார்க்க முடிகின்றது, 'இன்று சேர்ந்து இருக்கின்றோம், இன்று சேர்ந்து கொண்டாடுவோம்,நாளை வேறொருவருடன் கொண்டாடுவோம்' என்னும் போக்கு. இத்தகைய நட்பு வெறும் காசுக்கு உடல்விற்க்கும்  தொழிலைவிட கேவலமானதாகவே தெரிகின்றது.

3. பிரித்து, கொண்டாடி, சீரழிக்கும் கீழ்மக்கள் - சமூக, அரசியல், ஜாதி மற்றும் மதம் போன்ற மக்களை பிரித்து, பாகுபடுத்தி, அந்த சிறிய வட்டத்தில் மனிதனை பெரியவனாக காண்பிபதற்காக, தற்கொலைகள் கொண்டடப்படுவ்து ஒரு முக்கிய காரணமாக தெரிகின்றது.

உணர்ச்சிகளை தூண்டிவிட்டு, என்ன செய்வதென்று அறியாத இளைஞனை, வேறு நல்வழியும் காண்பிக்க தெரியாத, தற்கொலைகளை கொண்டாடி அவன் உயிரில் தங்கள் ப்ராச்சரத்தை செய்து ஊர் முழுவதும் பரப்ப விழையும்  தலைவர்கள், தற்கொலைகளை ஆதரிப்பது ஆச்சிரியமில்லை. மற்றொரு சுயமரிதை அதிகமுள்ள சமூகத்தில் நிச்சியமாக, இவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கபட்டோ அல்லது விரட்டபட்டோ இருப்பர். ஆனால், இந்த பிணம் தின்னி தலைவர்களை தொடர்ந்து தாங்கவேண்டியது தமிழகத்தின் துரதிஷ்டம்.  இன்றும் கூட ஒவ்வொரு தற்கொலையை கூட்டம் போட்டு கொண்டாடும் இந்த தலைவர்கள் எப்போதாவது, இவர்கள்து கூட்டங்களை 'இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை கூட்டம்' என்றோ, 'தற்கொலை எதிர்ப்போம் முழக்கம்' என்றோ பேசியதாக எங்கும் தெரியவில்லை.

4. தன்னம்பிக்கை வளர்க்கா கல்வி முறை -  இன்றைய கல்வி முறை, மாணவனை தனிமை படுத்தல் மாத்திரமின்றி, அவனை தன்னம்பிக்கை உள்ளவனாக ஆக்குவதில்லை. அப்படி ஆக்கியிருந்தால், நாம் பார்க்கும் தற்கொலைகளில் பெரும்பாலானவை படித்த இளைஞர்களாக ஏன் இருக்கின்றார்கள்? சிறு தோல்விகளை கண்டு மனமுடைந்து செய்வதறியாது, தற்கொலை செய்துகொள்ளும் ஒரு இளைஞனின் படிப்பு எம்மாதிரதிற்க்கு சமம்?

பல கல்வி மையங்களில் 'தன்னம்பிக்கை பயிற்சி' ஏதோ உடல் வளர்க்கும் பானத்தை போல் தனி 'ஸ்பெஷல்' வகுப்புகளில் புகட்டபடுகின்றது (சம்பாதிக்க இன்னொரு யுக்தி). இதைவிட கேவலமான கல்வி வேறென்னவாக இருக்க முடியும்? தன்னம்பிக்கை தான் கல்வியின் வெளிப்பாடாக இருக்கவேண்டுமே தவிர, அதற்க்கு தனியாக இன்னொரு பயிற்சி அளிப்பத்தைவிட இவர்கள் கல்வி அளிப்பத்தை நிறுத்தினாலே போதுமே? வெறும் மதிப்பெண் கொண்டு தன் மதிப்பை, தன உயிரின் மதிப்பை எடைபோடும் எண்ணத்தை உருவாக்கும் ஒரு கல்விமுறை எப்படி கல்வியாகும்?

5.  மறைந்து வரும் மக்கட்பண்பு - நல்ல பண்புகளை, கிண்டல் செய்வதையும், கீழ்த்தரமாக சித்தரிப்பதையும் நமது கலை, முக்கியமாக, எங்கும் வியாபித்துள்ள சினிமா கலை பெரும்பாலான சமயங்களில் செய்வது நாம் அறிந்ததே.  பொறுமை, நிதானம், அமைதி, அன்பு, பரிவு, பகிர்தல், பரோபகாரம், மரியாதை, எதிர்-பாலார் மதிப்பு, அடக்கம், நற்சொற்கள் கொண்ட மொழி பிரயோகம், நேர்மை, கண்ணியம், ஈகை, பணிவு...நமது மொழியில் உயர்ந்த மக்கட்பண்பிர்க்கு எத்தனை வார்த்தைகள் இருந்தும், இன்று இந்த பண்புகள் மாத்திரமின்றி, இந்த சொற்களும் நமது சமூகத்தை விட்டு மறையும் நிலை.

முன்பொரு காலத்தி ஆன்மிக சிந்தனையாளர்கள் இவற்றை சமூகத்தில் புகுத்தி வந்தனர். அவர்களை இழிவுபடுத்தி ஓரம்கட்டியபிறகு, வேறு யார் இந்த வேலையை செய்வார் என்று எவரும் சிந்திக்கவில்லை. இந்த பண்புகள் யாவையும் மற்றவருடன் நாம் நடந்து கொள்ளும் விதத்தை குறிப்பவயாக இருந்தாலும், இவை நாம் நமது வாழ்க்கை அமைத்து கொள்ளவும் உதவியாகவே இருக்கும். நிச்சியமாக 'தற்கொலை' போன்ற சிந்தனைகள் நமது மனதில் எழுவதை தடுக்கும்.

ஆம் மேலுள்ள அனைத்தும் வெறும் பிரச்சனைகள் தான், எங்கும் நான் விடைகளை தரவில்லை. எந்த ஒரு கேள்விக்கும், சுலபமாக விளக்கமோ, விடையோ அளிப்பது மற்றொரு நமது காலத்தின் துரதிஷ்டம். சமூக நிகழ்வுகளுக்கும், மாற்றங்களுக்கும் எளிய விடைகள் இல்லை. உண்மை எளிது, ஆனால் சமூகத்தில் அதனை ஏற்கும் தன்மை மிகவும் கடினம்.

தமிழகத்தில் இப்போதது விரக்தியும், வேதனையும், ஏமாற்றமும், ஏக்கமும், ஏற்க்கமுடியாத முடிவுகளும், ஏமாற்றப்பட்டோம் என்கின்ற உணர்வும், என்ன செய்வது என்று அறியாத நிலையம், கொண்ட பல இளைஞர்கள் மன உளைச்சலில் வாடுவது உண்மை. இதற்க்கு மேற்கண்ட போக்கை தட்டி கேட்காவிட்டாலும் பரவாயில்லை, அவற்றிற்கு நமது வாழ்வில் இடம்  கொடுத்து வாழ்விததுக்கொண்டு இருக்கின்றோம்.

இனி ஒரு விதி செய்வோம் என்று நாம் துவங்குவோமேயனால், முதலில் நாம் செய்ய வேண்டியது -
- நமது பிள்ளைகள பள்ளிக்கூடம் கல்வி மாத்திரமே கல்வி என்னும் தவறான வழியிலிருந்து காப்போம். கல்வி என்பது வள்ளுவன் சொன்னதை போல், அறிவு வளர்ச்சிக்கும், மெய்ப்பொருள் காண்பதற்கும் மாத்திரமே என்பதை சிறு வயதிலிருந்தே உணர்த்தவேண்டும்.
- தன்னம்பிக்கை என்பது, மனிதர்களுக்கு, மனித குலத்திற்கு இன்றியமையாத ஒரு தனித்வம், இதனை சிறுவயதிலேயே அடையவேண்டியது கட்டாயம் என்பதை நாம் முதலில் உணர வேண்டும், பிறகு, அதனை, போதிக்காமல், நமது நடத்தை மூலம் குழந்தைகளுக்கு உணர்த்தவேண்டும். குழந்த்தைக்கு, கொஞ்சுதல் என்ற பெயரால் மரியாதை குறைவாக பேசுவதற்கோ அல்லது, செல்லம் கொடுப்பதாக நினைத்துக்கொண்டு பிறர் புண் படும்விததில் பழக விடுவதோ தவறு என்பதை நாம் உணர்ந்து, அவ்வாறல்லாது குழந்தைகள் முன் நமது நடத்தையை மாற்றுவது முக்யமான பெற்றோர் கடமை
- சக மாணவர்களுக்கு உதவுவதை நிச்சியமாக பெற்றோர வரவேர்க்கவேண்டும்
- மனிதநேயத்தை உணர்த்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்வது அவசியம்
- முடிந்தவரை, 10 வயது வரையாவது குழந்தைகளை தொலைகாட்சி பெட்டிக்கு அடிமையாகாமல் பாதுகாக்கவேண்டியது பெற்றோரது கடமையாகும்
- இளைஞர்களை கொஞ்சமாவது உயர்ந்த பண்புகளை பார்க்கவும், கேட்கவும், பயனடையவும் செய்தல் அவசியம். பெரும்பாலான இளைஞர்கள், ஒரு நல்ல கவிதையையோ அல்லது நல்ல இசையையோ, கட்டுரையோ, கதையோ அனுபவித்ததில்லை. ஆதலால் கலை கற்பிக்கவேண்டிய உயர்பண்புகள் வேறெங்கும் கற்கவோ, கிடைத்தால் அனுபவிக்கவோ தெரியாமலேயே வளர்ந்துவிடுகின்றான்.
-  மாணவர்களை தொண்டு செய்ய தூண்டுதல் அவசியம், மற்றவர்க்காக ஒருமுறை தொண்டு செய்து அதன்மூலம் மற்றவர் பெரும் சந்தோஷத்தை ஒரு முறை அனுபவித்தவன், என்றும் தற்கொலை செய்வதை எளிதாக ஏற்கமாட்டான்

தொடர்வேன்...

Comments

Popular Posts