மத்திய சென்னை வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!



மத்திய சென்னை வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!


மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியானது - அண்ணா நகர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம், எழும்பூர், சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி என்கின்ற சென்னையின் சில முக்கியமான பகுதிகளை கொண்ட ஒரு தொகுதி.  ஏறத்தாழ 12 லட்சம் வாக்காளர்களாகிய நீங்கள் சென்றமுறை  நாடாளுமன்றத்தில் உங்களையும், உங்கள் உணர்வுகளையும் எழுப்ப தகுதியானவர் என்று திரு. தயாநிதி மாறன் அவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பினீர்கள்.

சென்றமுறையும்,  அவர் தாத்தாவும், மாமாவும் உங்களிடம் ஆதரவு கேட்டனர். "அவர் ஆங்கிலம் நன்றாக பேசுவார்" என்பதினாலேயே அவரை டில்லியில் குடும்ப பிரதிநிதியாக அனுப்ப உங்கள் வோட்டுக்களை உபயோகப்படுத்தினர். அவர் நாடாளுமன்றத்தில் விவாதித்த நாட்களோ அல்லது உங்களுக்காக குரல் கொடுத்த நாட்களோ மிக சொற்பம். குடும்ப பிரச்சனைக்காக அவர் வேலை அதிகமாக செய்ததாகவே தெரிகின்றது.  இதன் முத்தாய்ப்பாக, தனது சகோதரர் கொம்பனிக்கான தொலைபேசி, இவர் மந்திரி பதவியை உபயோகப்படுத்தி இலவசமாகவே உபயோகித்ததும், இந்த ஊழல் வெளியே தெரிந்ததும், பதவி விலகியதும் நாம் அனைவரும் அறிந்ததே.

உங்கள் பகுதியை, உங்கள் பகுதியின் இன்றைய நிலை, கடந்த 5 ஆண்டுகளில் என்ன மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை கொஞ்சம் சுற்றி பாருங்கள்! மணம் மாறா சாக்கடைகள்,
இன்னமும் அதிகரித்துள்ள குப்பை மேடுகள், அவற்றின் நடுவே வாழ்க்கைக்கு போராடிக்-கொண்டுள்ள நமது ஏழை மக்கள்,
குறுகிய சாலைகளில் அதிகமாகிவரும் பாதுகாப்பில்லா வாகன ஓட்டம், குறுகிய சந்துகளின் மத்தியிலும் பெருகிவரும் மக்கள் தொகை, அதற்க்கு கொஞ்சமும் ஈடு கொடுக்க இயலாத வசதிகள்,
ஒவ்வொரு மழைகாலத்திலும் வெள்ளமாக மாறும், கோடையில் வெப்பத்திற்கு ஒதுங்க நிழல்கூட இல்லாத சாலைகள்,
எங்கும் முளைத்துள்ள செல்போன் டவர்கள்,
பாதசாரிகளுக்கு லாயக்கில்லாத சாலைகளில்,
சொகுசாய் பயணிக்க ஆகாய ரெயில்களின் வேலை மாத்திரம் ஜரூராக நடக்கின்றது ஆனால் கொசுக்களை ஒளிக்க எந்த அரசாங்கத்திற்கும் அக்கறை இல்லை,
பெருகிவரும் மக்கள் உடல்நல இன்னல்கள், அதை வலியுறுத்தும் விதத்தில் தெருவிற்கு 4 மருத்துவமனைகள், 8 மருந்து கடைகள்,
இவற்றின் பிடியிலிருந்து தப்பியவருக்கு தவறாமல் தெருவிற்கு பல TASMACக்குகள்.

இதுல இவர் என்ன செய்தார்?

இவர் உங்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்றால், சரி, பாவம் அவர் வசிக்கும் சொகுசு மாளிகை உங்கள் பகுதியில் இல்லை அதனால் தெரியவில்லை. உங்கள் உணர்வுகளுக்காகவாவது எப்போதானும் குரல் கொடுத்தாரா என்று பார்த்தால், அதுவும் இல்லை. இலங்கை தமிழர் படுகொலை, தமிழக மீனவர்களின் மேல் தாக்குதல், தமிழகத்திற்கான தண்ணீர் பிரச்சனை, கூடங்குளம், இப்படி தமிழகத்தில் நாம் எல்லாரும் பலமுறை ஆராய்ந்து, பேசிய பல விஷயங்கள்...நம்ம வாழ்க்கையின் மத்தியில் நாம் time passக்கு பஸ் ஸ்டாண்டில் பேசுற சினிமா கிசுகிசு நேரம் கூட இந்த மனுஷன் தமிழர்க்கு தேவையான விஷயங்களை நாடாளுமன்றத்தில் பேச முயற்சி பண்ணலை.

வெட்கம்கெட்டு, அதே மனிதர் இன்று மீண்டும் உங்கள் வோட்டுக்களை அவர் குடும்ப நலத்திற்கு வேலை செய்வதற்காக உபயோகித்துக் கொள்ளவே உங்களை  நாடி வந்துள்ளார். அவர் தாத்தாவும், இந்த முறை என்ன சொல்லி  வோட்டு கேட்பது என்று அறியாது, "அவன் சுட்டி, மான் குட்டி,..." என்று ஏதோ திரைப்பட பாடல் எழுதுவதாக எண்ணிக்கொண்டு உங்களுக்கு பிட் நோட்டிசை அனுப்பியுள்ளார். அவருக்கே அதுக்கு மேலே எழுத ஒன்னும் வரல்ல. ரேகார்டுல பாட்டு போட்டு, காசுக்கு ஆட்கள போட்டு, பொம்மைய அவரை வண்டியில் நிக்க வெச்சு, உங்களோட வோட்டை காசுக்கு வாங்கறதா நினைச்சு, ஜனநாயகத்தை அவமானபடுத்தும் இந்த மனிதரை நீங்கள் மீண்டும் வோட்டு போட்டு அவர் குடும்ப தொழிலை உங்கள் செலவில் பார்க்க அனுப்ப போகிறீர்களா?

கொஞ்சம் யோசியுங்கள்.

சென்னையின் பல பழமையான பகுதிகளை சேர்ந்தவர்கள் நீங்கள். ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடக்கும் பல முக்கிய திருவிழாக்கள் உங்கள் பகுதியில் தான் நிகழ்கின்றது. பல மதத்தை சேர்ந்தவர்கள், மொழி மற்றும் இந்தியாவின் பல பகுதியை சேர்ந்தவர்களும் சேர்ந்து ஒற்றுமையாக, காலகாலமாக இருந்துவருவது இந்த சென்னை நகரை, இந்தியாவின் மிக அமைதியான நகரமாக தொடர்ந்து நிலைநாட்டி  வருகிறது.

இன்று இந்தியா எதிர் கொண்டிருக்கும் முக்கியமான சவால்  - அமைதியை சார்ந்தது. "இந்த நாடு அமைதியான, மத நல்லிணக்கத்தை பேணிகாக்கும் நாடாக தொடருமா?" என்னும் கேள்வியை உலகமே கேட்டு மிக ஆர்வத்துடன் நோக்கும் கால கட்டத்தில் இப்போது நமது தேர்தல் நடக்கின்றது.

தொடர்ந்து உங்கள் பழைய நாடாளுமன்ற உறுப்பினரை போல் பல ஊழல்வாதிகளை அடைகாத்து, முன்னிறுத்தி, வெட்கம் கெட்டு, ஒளிய இடமில்லாமல் தவிக்கும் காங்கிரஸ் ஒரு பக்கம்,  'யாரோடு கூட்டு இருந்தாலும் இல்லாவிட்டாலும் எங்கள் குடும்ப தொழில் தொடரும்' என்று தொடரும் கழகம் மறுபக்கம், இந்த கழகத்திலிருந்து முளைத்த பல கிளை கழகங்களும் அவற்றை ஆளும் சந்தர்ப்பவாதிகளும் இன்னொரு பக்கம், அமைதியை குலைக்கும் மிகபெரிய சக்தியாக உருவாக வாய்ப்பிருக்கும் ப.ஜ.க. மற்றொரு பக்கம் என்று பல முனை போட்டியாக ஒரே விதமான அரசியல் கலாசாரத்தில் முளைத்தவர்கள் உங்களை நாடி வாக்கு கேட்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அமைதியாக இவர்களின் மத்தியில் ஒரு மனிதர், 200 க்கும் மேற்பட்ட கி. மி. உங்கள் பகுதியில் மாத்திரம் கடந்த ஒரு மாதமாக நடந்தே, உங்களில் ஏறத்தாழா 40000 பேருக்கு வணக்கம் கூறியும், கைகுலுக்கியும் வருகின்றார். "இவரை பார்த்தல் அரசியல்வாதி மாதிரி இல்லியே?" என்று குழம்பி பார்ப்பவர்க்கு இவர் மிக எளிதாக, "இல்லை, நான் அரசியல் வாதி இல்லை. நான் உங்களை போல் ஒரு சாமானியன், உங்களில் ஒருவன். நான் அரசியலுக்கு சம்பாதிக்க வரவில்லை, உங்களின் கஷ்டங்களையும், உங்களின் உணர்வுகளையும் நாடாளுமன்றத்தில் சேர்ப்பதே என் வேலை" என்று கூறுகின்றார்.

மற்ற வேட்பாளர்களை சுற்றி கூலிக்கு வேலைசெய்யும் அடியவர் கூட்டம், இவரை சுற்றி மாத்திரம் இளைஞர் கூட்டம், எல்லோரும் படித்தவர்களாக தெரிகின்றனர், பண்போடு பழகுகின்றனர், சிரித்து வாக்கு கோருகின்றனர், இவர்களது அரசியல் கலாசாரமே மிகவும் ஒழுக்கமாகவும், வியப்பில் ஆழ்த்த வல்லதாகவும் உள்ளது.

யார் இவர்கள்?

இந்திய அரசியலில் வானில் மாற்றத்தை உருவாக்க புறப்பட்டுள்ள ஒரு புதிய சிகரம் தான் இவர்களை  இணைத்துள்ள "ஆம் ஆத்மி கட்சி", அதாவாது எளிய மக்கள் கட்சி.

 யார் இந்த விந்தை மனிதர்?

 ஜே.பி. என்று எல்லாராலும் மரியாதையுடனும் அன்புடனும் அழைக்கப்படும் இந்த அமைதியான மனிதர், அன்றாடம் நாம் காணும் காட்சிகளின் கலைநயத்தை ஓவியம் மூலம் நமக்கு எடுத்து காட்டவல்ல ஒரு அருமை ஓவிய கலைஞர். முப்பதாண்டுகளுக்கும் மேலாக தன்னார்வு தொண்டர்களை தேடி, கண்டுபிடித்து, அவர்களுடன் தானும் வேலைசெய்து, அவர்களது செயல்களை பகிர்வதன் மூலமாகவும், அவர்களின் நேசமிகு சங்கமத்தில் தன சுகத்தை கண்டுவரும் ஒரு உன்னத மனிதர். சாதாரண மக்களின் துயரங்களை தினம் தினம் கண்டு, அதனை போக்க தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு யாரையும் எதிர் பார்க்காமல் தொடர்ந்து பணிசெய்யும், விவேகனந்தர் வழி வரும் ஒரு கர்ம வீரர். எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையாக தன குடும்ப கடைமைகளை ஆற்றிவரும் ஒரு சாமானிய இந்தியர்.

என்றேனும் இந்த நாடு எளிய மக்களுக்காக இயங்காதா? இங்குள்ள அரசியல் மாறாதா? என்று அங்கலாய்க்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு, இன்று, "நான் அதற்க்கு தயாராக இருக்கிறேன்", என்று உங்கள் பகுதியிலேயே வசித்துவரும் திரு. ஜே. பி. அவர்கள் முன்வந்துள்ளார்.

அமைதிக்கும், ஊழலற்ற மாற்று அரசியலுக்கும் தேசிய அளவில் ஒரு மாற்றத்தையும், உலகளவில் ஒரு நம்பிக்கையும் ஏற்படுத்தும் வலிமை இன்று நீங்கள் ஒவ்வொருவரும் செலுத்தும் வாக்கிற்கு உள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க வாய்ப்பு நமது வாழ்வில் நிகழ்வது நமக்கு பெருமை, உங்கள் வாக்குகளை திரு. ஜே. பி.க்கு அளிப்பதின் மூலம், இந்த தேசத்திற்கும் உலகிற்கும், நீங்கள் ஒரு வலுவான,  அமைதியான செய்தியை தருகிறீர்கள்.

இந்த வேண்டுகோளை இவ்வளவு தூறும் படித்திருந்தால் நன்றி, நிச்சியமாக வாக்களிக்க தவறாதீர்கள். தீயவர்கள் திளைக்க, நல்லவர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதே முக்கிய காரணம் என்னும் காந்தியின் சொற்களை இந்த தருணத்தில் நினைவில் கொள்ளுங்கள். 



நன்றி.

Comments

Popular Posts