சுப. உதயகுமாரும், தமிழக ஆம் ஆத்மியும்...
திரு. சுப. உதயகுமார் அவர்கள் தான் ஏன் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி செயல்பட இருக்கின்றேன் என்பதை அவருக்கே உரித்த தெளிவான விதத்தில் விவரிதுளார் (கீழே).
தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி உருவாகவும் தழைக்கவும் அனைத்து காரணங்கள் இருந்தும், அப்படி ஆகாமல் இருப்பதற்கு முக்கிய காரணங்கள் சில உள்ளன -
1. தில்லியில் முக்கிய பொறுப்பில் உள்ள ஆம் ஆத்மி கட்சியினர் தமிழகத்தை புரிந்துகொள்ள பெரிய அளவில் முயற்சி மேற்கொள்ளவே இல்லை என்றே தோன்றுகின்றது.
2. தேசிய அளவிலான எந்த புதிய முயர்ச்சியும் எல்லா மாநிலங்களையும், புரிந்துகொள்ள எதிர்பார்ப்பது நடைமுறைக்கு சாதியமில்லைதான். அப்படியிருக்க, தமிழகத்திலிருந்து, தமிழக நிலைமையை தேசிய அளவில் எடுதுரைக்ககூடியவரை தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும். இதுவும் ஆம் ஆத்மியினர் செய்யவில்லை. இதுவரை அவரகளது "தலைமை" நிர்ணயித்தல் என்பது, அவர்களை யார் தேடிவந்து பேசுகின்றார்களோ அவர்களை மாத்திரமே தலைமைக்கான தகுதிபடைத்தவர்கள் என்கின்ற எண்ணத்துடன் செயல்படுவதாகவே தெரிகின்றது.
3. இப்படி செய்ததினால், தமிழகத்தில் தலைமை ஏற்றவர்கள் யாவரும் தமக்கு சாதகமான முடிவுகளை உள்ளூர் முடிவுகளாகவும், இதர முடிவுகளை டில்லிக்கு அனுப்பி காலம் கடத்தியும் வந்தது சாஸ்வதம். இதனால் இளைஞர்கள் அதிகம் வரக்கூடிய ஒரு கட்சியில், அவர்கள் விரைவிலேயே ஏமாற்றம் அடைந்துவிடும் விதத்தில் மாநில தலைமை நடந்துகொண்டது.
4. இதில், பொறுப்பில்லாத சிலர் தலைமைக்கு (தில்லியில் மற்றும் சென்னையில்) தாங்கள் நேரடியாக பேச வாய்ப்புள்ளது என்று கூறி, தங்கள் செல்வாக்கை ஏற்படுத்த முற்பட்டதின் காரணமாக மேலும் பல 'குழுக்கள்' மற்றும் 'தர்பார்கள்' செயல்பட துவங்கியதும் உண்மை.
5. தமிழக அரசியல் கலாசாரத்தில் திளைத்த சிலர் இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு தமிழக ஆம் ஆத்மியில் தங்கள் முகாம்களை அமைத்துக்கொண்டது கட்சிக்கு எந்தவிதமான பலமும் சேர்க்கவில்லை
6. இங்கு 'பெரிய அளவில்' தாங்கள் ஏதோ சாதித்துவிட்டதாக தலைமையில் இருந்தவர்கள் டில்லிக்கு மிகைபடுத்தப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கைகளையும் மற்றும் திரித்த உண்மைகளையும் supply செய்தது தங்கள் நிலையை தக்கவைத்துக்கொள்ளவே அன்றி எந்தவிதத்திலும் கட்சியை தமிழகத்தில் வளர்க்க இது உதவவில்லை
இந்த பின்னணியில்தான் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கபட்டபோழுது, டில்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தார்மீக வெற்றியை கண்டு நாட்டில் உள்ள ஒவ்வொரு சிந்தனைவாதியும், சித்தாந்தவாதியும் வியந்து (இந்த உணர்வுடனும், இதே காலகட்டத்தில்தான் நானும் இந்த கட்சியில் சேர்ந்தேன், ஆனால், அது வேறொரு கதை, மற்றொரு கட்டுரைக்கு உகந்தது).
அவர்களுடன் நாமும் சேர்ந்து ஏதேனும் செய்யமாட்டோமா என்ற ஏக்கத்தில் ஆம் ஆத்மியில் இணைய துவங்கினர். தமிழகத்தில் எழுத்தாளர் திரு. ஞானி அவர்கள், "இன்னமும் பத்து வருஷம் கழிச்சு இந்த காலகட்டத்தில் நான் வாழ்ந்தேன் ஆனால் ஆம் ஆத்மிக்கு தோள் கொடுக்கவில்லை என்று நொந்துகொள்ளாமல் இருப்பதற்கு, இப்போது சேர்ந்து நம்மாலானது செய்வது மேல்" என்ற திண்ணதுடன் கட்சியில் இணைந்தார். இதே காலத்தில்தான் திரு. சுப. உதயகுமார் மற்றும் அவரது நெருங்கிய பி.மோ.எ.நு.இ. சக போராளிகளான, மைபா. ஜேசுராஜ் மற்றும் திரு. புஷ்பராயன் ஆகியோருடன் ஆம் ஆத்மியில் இனைந்து, தேர்தல் களத்தில் குதிப்பது என்று முடிவானது.
இப்பொழுது திரு. சுப. உதயகுமார் தான் இந்த கட்சியின் உறவை துண்டிப்பதற்கு கூறும் 3 முக்கிய காரணங்கள் - (1) ஆம் ஆத்மியின் தெளிவில்லா அணுசக்தி கொள்கை, (2) டில்லியில் தமிழக ஆம் ஆத்மி கட்சியை குறித்த தெளிவின்மை மற்றும், (3) அணுசக்திக்கு எதிரான போராட்டத்திற்கு தான் தயாராகும் நிலையில் ஒரு கட்சியின் சார்பு என்பது ஒரு கூண்டுக்குள் தன்னை அடைத்தது போன்ற உணர்வு.
இந்த மூன்று காரணங்களில் முதல் இரண்டை கூர்ந்து நோக்குவது ஆம் ஆத்மி கட்சியின் தமிழக நிலை குறித்து அக்கறை கொண்ட அனைவரும் நிச்சியமாக செய்யவேண்டிய ஒன்று.
ஆம் ஆத்மியின் அணுசக்தி பற்றிய அணுகுமுறை
திரு. சுப. உதயகுமார் ஏன் ஆம் ஆத்மியில் இணைய முடிவெடுத்தார், அதனால் அவருடைய கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு இயக்கத்தின் எதிர்காலத்திற்கு என்ன குந்தம் ஏற்ப்படும் என்பதைக்குறித்து அவர் தன்னுடைய நண்பர்களுடனும், இதர ஆர்வலர்களுடனும் நிச்சியமாக கலந்து ஆலோசித்துதான் இந்த முடிவை எடுத்தார். ஆனால், "இடிந்தகரை போராட்டத்தை நேரில் வந்து பார்த்த ஒரே தேசிய கட்சி தலைவர்" என்கின்ற அந்தஸ்தை அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் பெரிதாக எண்ணியதாக தெரியவில்லை.
ஆம் ஆத்மி கட்சியின் "ஸ்வராஜ்" நிலைபாட்டை புரிந்தவர்கள் கூட அணுசக்தி சார்ந்த நிலைபாட்டை சரியாக உணரவில்லை. இந்திய அளவில் இந்த கொள்கை மிக முக்கியமானதாக ஆம் ஆத்மி கட்சி கருதவில்லை, தமிழக அளவில் இதனை சரியாக புரிந்துகொள்ளவோ, பேசவோ ஆட்கள் இல்லை. இதனால்தான், ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கையில் கூட கூடங்குளம் குறித்த நிலைப்பாடு மழுப்பலாகவே இருந்தது.
தமிழகத்தில் மின்சார தட்டுபாடு நிறைந்த சூழலில், அணுசக்தி எதிர்ப்பு எங்கு மக்கள் முன்னால் செல்லுபடி ஆகாமல் போகுமோ என்கின்ற பயம் ஒரு பக்கம். மற்றொரு பக்கம், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைமைக்கேகூட அணுசக்தி பற்றி ஒரு கொள்கை பிடிப்பு இல்லாமை. கட்சியின் தலைமைக்காக போராடிக்கொண்டிருந்த இருவர், தங்களுக்கு போட்டியாக உதயகுமார் உருவாவதை விரும்பவில்லை. இதனாலேயே, அணுசக்தியை குறித்த எந்த ஒரு அக்கறையும் எடுக்காமலே இந்த கட்சி இந்த மாநிலத்தில் இன்று வரை நின்று வருகின்றது.
அணுசக்தி மற்றும் அதன் கேடுகள் பற்றி தெரிந்துகொள்வது அவ்வளவு எளிதானதல்ல. தமிழகத்தில் தொடர்ந்து ஊடங்கங்களில் இருட்டடிக்கப்பட்ட இடிந்தகரை போராட்டம் மற்றும் அனைவரையும் பாதிக்கும் மின்சார தட்டுபாடு, தினம் தினம் மின்சாரத் தட்டுபாடிற்கு இடிந்தகரை போராட்டம் தான் காரணம் என்பதுபோல் ஜோடிக்கப்பட்ட செய்திகள் மற்றும் நாராயணசாமியின் அறிக்கைகள் என்று பன்முறை தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட தமிழகத்தில் அணுசக்தி பற்றி ஒரு நிலையை, சான்று பூர்வமாகக்கூட எடுக்கமுடியாத உணர்ச்சிவாயிலாகவே முடிவெடுக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவிக்கும் படித்த கூட்டமும் இதில் அடக்கம். (நான் அணுசக்தி குறித்து 2007 முதல் எதிர்த்து எழுதிவருவதை இங்கு படிக்கலாம்).
கட்சியின் அணுசக்தி நிலைபாட்டை தேசிய அளவில் சுப. உதயகுமாரைகொண்டு எழுதுவதின் மூலம், கட்சி அவர் போராடதிற்க்கும், அவர் இந்த கட்சியில் இணைந்ததிர்க்கும் ஒரு அர்த்தம் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், அந்த வாய்ப்பையும் ஆம் ஆத்மி எடுத்த மற்றொரு முடிவு தகர்த்தது. அதாவது, பெரும்பாலான இடங்களில் இந்தியா முழுவதும் வேட்பாளர்களை நிறுத்துவது என்னும் கொள்கை. இந்த கொள்கையினால், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தேர்தல் அறிக்கையில்கூட வழவழ என்று பல கொள்கைகள் நீர்த்துவிடபட்டன. இதற்கு காரணம் 400 க்கும் மேற்பட்ட நேர்மையான ஆட்கள் வேண்டும் என்றால், அவர்கள் அனைவரும் பேசக்கூடிய அளவில் ஒரு அறிக்கை உருவாக்கவேண்டும் என்பதே. அனைவரையும் சந்தோஷமாக இருக்க எந்த ஒரு அறிக்கையும் தயாரிக்க இயலாது. அப்படிப்பட்ட ஒரு அறிக்கையை தயார் செய்தால் அது மற்ற கட்சிகளின் அறிக்கைகளைவிட எந்த விதத்திலும் மாறுபட்டு இருக்காது என்பதை ஏனோ தேசிய அளவில் இந்த அறிக்கையை தயார் செய்தவர்கள் உணரவில்லை. இன்றுவரை ஆம் ஆத்மி கட்சிக்கு, இந்த கட்சியை சேர்ந்த எந்த ஒரு பேச்சாளருக்கும் அணுசக்தி குறித்த புரிந்த ஒரு நிலை இருக்கின்றதா என்பது சந்தேகமே.
ஆம் ஆத்மி கட்சியில் தமிழகத்தின் நிலை
இந்த பின்னணியில் கட்சியில் சேர்ந்த உதயகுமார் அவர்கள், கட்சிக்குள் தன்னுடைய நிலைக்கு ஆதரவு திரட்ட முயற்சிக்கவில்லை, கட்சியின் தமிழக தலைமையும், இவரின் வருகையினால் கொஞ்சம் ஆட்டம்கண்டு இவருக்கு ஆதரவு கட்சிக்குள்ளேயே வளர எந்தவிதமான வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை. உதயகுமாரை குறித்து வதந்திகள் டில்லிக்கும் அனுப்பப்பட்டது.
இதில் என்றும் திரு. உதயகுமாரை தாக்க காத்திருக்கும் ஊடகங்களின் ஹேஷ்யங்கள் வேறு, "இவருடைய போராட்டம் தோல்வி அடைந்துவிட்டது, அதிலிருந்து மதிப்புடன் தப்புவதற்கு தான் இவர் அரசியலில் குதிக்கிறார்" என்று...இவை ஆம் ஆத்மியின் ப்ரேவசதிர்க்கு தடைகளாகவே இருந்தது.
மற்றும், சுப. உதயகுமார் மற்றும் அவரது நண்பர்களும் இருந்த சூழலில் அவர்கள் தங்களுக்கு தேவையானவற்றை கட்சியின் "மேலிடம்" என்று கருதப்பட்ட டில்லிக்கு நேரடியாக பேசி தீர்த்துகொண்டது, மாநில அளவில் கட்சியை அவர்கள் ஒருபொருட்டாகவே மதிக்கவில்லை என்கின்ற சமிஞ்ஞை அளித்தவிதமாக இருந்தது.
இன்று நாராயண சுவாமியின் பொய்கள் அம்பலமாகிவிட்டன, கூடங்குளம் கலாம் போன்றவர்கள் கூறிய அளவிற்கு இன்னமும் உற்பத்தியை தொடர்ந்து செய்து, மின்சாரத்தை தமிழகத்திற்கு அளிக்கவில்லை. இப்போதும் கூட இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் அணுசக்தி குறித்த கொள்கைகளை தீவிரமாக மறுஆய்வு செய்யகோரும் என்கின்ற நம்பிக்கை இல்லை. ஆம் ஆத்மியும் இதில் அடக்கம்.
தமிழக மக்களின் உணர்வுகளை, தமிழகம் சார்ந்த முக்கிய சவால்களை ஆம் ஆத்மி கட்சியினர் தேசிய அளவில் சிறிதும் உணராதது, இந்த கட்சிக்கு ஒரு மிகப்பெரிய பலவீனம். தேசிய அளவிலான இந்த கட்சியின் உட்கட்சி கட்டமைப்புக்குள் தமிழகத்தை சேர்ந்த எந்த ஒரு தகுதியான நபரும் இல்லாதது, வருந்தக்கூடியது.
ஆம் ஆத்மியில் ஏற்பட்ட சில தேர்தல் அனுபவங்களை குறித்து மேலும் எழுதலாம் என்று இருக்கின்றேன். தமிழகத்தில் ஆம் ஆத்மியின் வருங்காலம் குறித்து ஜூன் மாதமே நான் எழுதியிருந்தேன்.
================
ஆம் ஆத்மியும் நானும்
சுப. உதயகுமாரன், நாகர்கோவில், அக்டோபர் 16, 2014
ஆம் ஆத்மி கட்சியோடான எனது உறவை மாற்றியமைத்திருக்கிறேன். செப்டம்பர் 19, 2014 அன்று நெல்லை மாவட்டம் காவல்கிணறைச் சார்ந்த தம்பி ஸ்டீபன் அமிர்தராஜ் மற்றும் பிகார் நண்பர் குமார் சுந்தரத்தோடு ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களை தில்லியிலுள்ள கட்சி அலுவலகத்தில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினேன். தமிழகத்திலும், கேரளத்திலும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க வேலைகளை முனைப்புடன் செய்து கொண்டிருப்பதால் கட்சிப் பொறுப்புக்களை என்னால் ஏற்க முடியாது. அதுபோல இவ்விரண்டு மாநிலங்களிலும் பல தரப்பு மக்களோடு இணைந்து வேலை செய்ய வேண்டியிருப்பதால், ஒரு கட்சியோடு என்னை அடையாளப்படுத்திக் கொள்வது உகந்ததல்ல எனும் நிலையையும் விளக்கிச் சொன்னேன்.
ஆம் ஆத்மி கட்சி இந்தியாவின் அணுசக்திக் கொள்கை பற்றி ஒரு தெளிவான, வெளிப்படையான நிலையை எடுக்கவில்லை, கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை இந்தப் பிரச்சினை குறித்து எதுவும் சொல்லவில்லை எனும் எனது ஆதங்கங்களைப் பதிவு செய்தேன். இருவருமாக மனந்திறந்து நடத்திய ஒரு விவாதத்துக்குப் பிறகு, தமிழகத்திலும், கேரளத்திலும் நான் சுதந்திரமாக இயங்குவது என்றும், தில்லி சட்டமன்றத் தேர்தல் நடக்கும்போது நான் கட்சிக்காக என்னாலான வேலைகளைச் செய்வதாகவும் ஒத்துக் கொண்டோம்.
ஆம் ஆத்மியோடான உறவை ஒட்டுமொத்தமாக அறுத்துக்கொள்ள விரும்பாததற்கு பல காரணங்கள் இருகின்றன. மதவாத பாரதீய ஜனதா கட்சிக்கும், ஊழல்வாத காங்கிரசு கட்சிக்கும் இந்திய அளவிலே ஒரு மாற்று தேவைப்படுகிறது என்று உறுதியாக நம்புகிறேன். தோழர் திருமாவளவன், தோழர் கணேசமூர்த்தி போன்றோர் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் தில்லியிலே நமக்குத் தோழர்கள் வேண்டும் என்பதை உணர்கிறேன். கூடங்குளம், கல்பாக்கம், நியூட்ரினோ, மீத்தேன், கெயில், காவிரி, முல்லைப் பெரியார் உள்ளிட்ட அனைத்து தமிழர் பிரச்சினைகளும் தில்லியிலே முடிவு செய்யப்படுவதால், நாம் தனிமைப்பட்டுவிடக் கூடாது என்று நினைக்கிறேன். கேரளத்தையும் தமிழகத்தோடு இணைத்துக் கொள்வதற்கு காரணம் கூடங்குளம், நியூட்ரினோ பிரச்சினைகளில் அவர்கள் நம்மை ஆதரிப்பதால்தான். இம்மாதிரியான ஒத்துழைப்பின் மூலம், கேரளாவோடான பிற சிக்கல்களில் நியாயமான தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று கருதுவதால்தான்.
அரசியலில் முனைவர் பட்டம் பெற்று, கிரேக்க அரசியல் முதல் கட்டுடைப்பு (deconstruction) விழுமியம் வரை பயின்ற நான் ஓர் அரசியல் கட்சியில் சேர்ந்து, அவர்களின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, நடவடிக்கைகளுக்குத் தலைவணங்கி, தலைவர்களுக்கு ‘ஜே’ போட்டு அரசியல்வாதியாய் நடப்பேன், தேர்தலில் நிற்பேன், வீடு வீடாக வாக்கு சேகரிப்பேன் என்றெல்லாம் நான் கற்பனைசெய்ததுகூடக் கிடையாது. என்னை ஒரு பசுமைச் சிந்தனையாளன், தமிழ்த்தேசியன், சமத்துவவாதி, மனிதநேயன் என்று நினைத்துக்கொண்டிருக்கும் நான், கொள்கைகளில் தெளிவில்லாத ஆம் ஆத்மி கட்சியில் எப்படி நிலைத்திருக்க முடியும் என்ற குழப்பம் மனதில் ஓடிக்கொண்டேதான் இருந்தது. கேப்டன் கோபிநாத்தும், மீரா சான்யாலும் அங்கம் வகிக்கும் கட்சியில் நானும் எப்படி இயங்குவது என்று குழப்பமாக இருந்தது. ஆனாலும் மேதா பட்கர், தயாமணி பர்லா, சோனி சோரி, ரச்னா டிங்க்ரா, அனிதா பிரதாப், அலோக் அகர்வால் போன்ற போராளித் தோழர்களுடன் இணைந்து நின்றது ஒருவித மகிழ்ச்சியைத் தந்தது....
Comments