தமிழகத்தில் மரபணு பயிர்களை பரப்ப முயற்சிகள் நடந்து வருகின்றது


தமிழகத்தில் மரபணு பயிர்களை பரப்ப முயற்சிகள் நடந்து வருகின்றது...இதற்கு முதல் கட்டமாக சிலர் தங்கள் ஆராய்ச்சி என்ற பெயரில், களபரிசோதனை செய்வதற்கு முயற்சிக்கின்றார்களோ என்று தோன்றுகின்றது...

June 27th: "துகளக் பத்திரிகையில் ம. ச. சுவாமிநாதன் அவர்களது நேர்காணல் வெளியாகியுள்ளது, அதில் அவர் மரபணு மாற்று விதிகளை குறித்து பேசியிருக்கின்றார்", என்று நண்பர் ஒருவர் தெரிவித்தார். அன்றே மாலை தற்செயலாக துக்ளக்  படிக்க நேர்ந்தது. ஒரு விஞ்ஞானி,அதுவும் உணவு குறித்து ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி, ஒரு புதிய தொழில் நுட்பத்தை குறித்து கருது தெரிவிக்கும்போது இந்த அளவிற்கு விட்டேத்தியாக  பேசியிருக்க முடியுமா என்று ஆச்சிரியப்படும் அளவிற்கு அவருடைய பேட்டி அமைந்திருந்தது.

"அமெரிக்காவில் சாப்பிடுகின்றார்கள் ஆனால் ஒன்னுமே அவர்களுக்க ஆகவில்லை" என்று இந்த தொழில் நுட்பத்தை உலகளவில்  பரப்பி அதன்மூலம் லாபமடைய முனையும் கொம்பனிகளின் விளம்பர வாசகங்களை போன்று நமது விஞ்ஞானியின் வாதங்கள் அமைந்திருந்தது, சிலருக்கு ஆசிரியமாக இருந்தது. பலருக்கு, "இவரு எப்பவுமே இப்படிதான்" என்று மீண்டும் அடித்துக்கூற சந்தர்ப்பமளித்தது.





பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு, மற்றும் OFM என்னும் இயற்க்கை விவசாயிகளின் சந்தையை நடத்திவரும் ஆனந்து அவர்கள், மேற்கூறிய நேர்காணலுக்கு எதிர்மறை தெரிவித்து எழுதியிருப்பது திருப்தி அளிக்கின்றது. அவரது எதிர்வினையை இங்கு பதிவு செய்துள்ளேன்.


july 8th: Ananthoo's response  -

சென்ற ஆண்டு மரபணுவை எதிர்க்கும் சில ஆர்வலர்கள் சேர்ந்து ஒரு புத்தகத்தை வெளியிட்டனர்: 400க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளின்/அறிவியல் அறிஞர்களின் ஆய்வுகள், படிப்பினைகள் அடங்கியது.  இவையாவும் உலகின் பல பெரும் பரிசோத்னைக்கூடங்களின் ஆய்வுகள்- மரபணு மாற்றுப்பயிர்களால் மனித ஆரோகியத்திற்கு, சுற்றுச்சூழலுக்கு, விவசாயிக்கு, விவசாயதிற்கு, அடுத சந்ததிக்கு, மண்ணுக்கு, நீர் ஆதாரத்திற்கு, தேனிக்களுக்கு விளையும் கேடுகள் என பல பாகுபாடுகளாக ப்பிரித்து வடிவமைக்கப்பட்ட இந்த விஞ்ஞானிகளின் தொகுப்பிற்கு முன்னுரை எழுதியவர் நமது ம.ச.சாமிநாதன் அவர்கள். அந்த 400ல் ஒன்று அவரது மகளின் ஆய்வு (மரபனு பருத்தியில் ஒரு பருப்பும் வேகவில்லை என்று கூறும் ஆய்வு!) ஒன்று! ஆப்படியானல் சென்ற துக்ளக் இதழில் அவர் அப்படி கூறியிருந்தாரே என்றால் - சாமிநாதன் போன்றவர்களுக்கும் பல அரசியல்வாதிகளுக்கும் வசதிக்கு ஏற்ப கருத்தை மாற்றிக்கொள்வது சர்வ சாதாரணம் அல்லவா? ஆனால் உண்மை என்ன என்று துக்ளக் வாசகர்கள் அறிவது முக்கியம் என  நான் விரும்புகிறேன்.

 மரபணு பயிர்களை/உணவை உலகளவில் எதிர்ப்பது பெரும்பாலும் அறிவியலாளர்களே.விஞ்ஞானிகளே! ஏதோ சில தன்னார்வலர்களும் 'ஆக்டிவிஸ்டுகளும்" அல்ல. இந்தியாவின் மரபீனிப் பொறியியலின் தந்தையான டாக்டர்.புஷ்பா பார்கவா (Father of geneteic engineering) அவர்கள் இதனை வன்மையாக எதிர்க்கிறார். எந்த‌ விதமான ஒழுங்கு வழிமுறைகள் மற்றும் கண்காணிப்பு அற்ற இந்த "வளர்ச்சி" இந்தியாவிற்கு தேவை இல்லை என்பதே பல அறிவியலாளர்களின் கருத்தும். உலகளவில் பல  விஞ்ஞானிகள் பல சோதனைகள் மூலம் இந்த தொழில்நுட்பம் இப்பொழுது விவசாயத்திற்கு தேவை இல்லை, இது பல சீரிய பின் விளைவு கொண்டது என்று எச்சரிக்கின்றனர்.
அப்படி என்றால் மேலை நாடுகள் இந்த தொழில் நுட்பத்தை அனுசரிக்கவில்லையா? இதனை பெரு வியாபாராமாக, லாப வெறியாக பார்க்கும் சில பெரும் அமெரிக்க கம்பனிகளின் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வெகு சில நாடுகளில் மட்டுமே செல்லுபடி ஆகியுள்ளது. 5 நாடுகள் மட்டுமே இன்றைய 90 சதவிகித மரபணு மாற்றுப்பயிர்களை உற்பத்தி செய்கின்றன. அதிலும் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் கானடா இதனை மிருக உணவாக மட்டுமே பாவிக்கின்றன. ஆனால் நம் போன்ற நாடுகள் மீது எல்லா உணவு வகைகளுக்கும் அழுத்தம் கொடுக்கின்றன, அரசியல் ரீதியாகவும். ஏழை ( நாடு)கள் எக்கேடு கெட்டுப்போனால் அவர்களுக்கு என்ன? அந்த உணவை பாவிக்கும் அமெரிக்கா என்ன ஆகிவிட்டது என்று கேட்போருக்கு: அமெரிக்கா தான் இன்று வியாதியஸ்தர்கள் நிரம்பிய நாடு. ஐரொப்பா போன்ற நாடுகள் இவற்றை தீவிரமாக எதிர்கின்றன. இவற்றை பாவித்த சில நாடுகளும் வாரம் ஒரு நாடாக சமீபத்தில் தடை செய்துள்ளன. (பொலிவியா, போலந்து, ருச்சியா, சுவிட்சர்லாந்து, என்று..)

மொத்ததில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மற்றும் உணவு பல வகையான கேடு விளைவிப்பவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை- மனித மற்றும் சுற்றுசூழல் ஆரோக்கியத்திற்கு, நம் அடுத்த தலை முறைக்கு, நமது நாட்டின் பொருளாதாரத்திற்கும். இதெற்கெல்லாம் மேலாக நமது விவசாயிகளின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் அழிப்பவை. முற்றிலும் இயற்கைக்கு எதிரான,இயற்கையை பெரிதும் பாதிக்கும் ஒரு தொழில் நுட்பம். காந்தியும் குமரப்பாவும் கூறியது போல், தொழில்நுட்பம்- பொருந்திய தொழில்நுட்பமாக இருத்தல் முக்கியம். மாற்று வழிகள் அதுவும் எளிதான தன்னிறைவை ஈட்டக்கூடிய வழிகள் இருந்தால் இந்த கொடிய விலை உயர்ந்த தீர்வு வேண்டுமா?

இன்றளவில் நமது நாட்டில் மரபணு மாற்றுப்பயிர் பருத்தியில் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு பி டி பருத்தி என்று (ராசி, பன்னி, ரம்யா, போல்கார்ட்  என பல பெயர்களில் உலா வரும் இந்த பருத்தி விதை எல்லாம் ஒரே ஒரு கம்பனியின் சொத்து. ஆம் மொன்சான்டோவினுடையது!) 10 வருடங்களாக உலா வருகிறது.  இந்த 10 வருடங்க‌ளில் 95 சதவிகிதம் இந்த பி டி பருத்தி தான் சந்தையில்- ஆனால் அது பெரும் லாபமோ நல்லதோ என்று அல்ல, வேறு தேர்வு (choice) இல்லாததால் மற்றும் பெரும் விளம்பரங்களினால் மட்டுமே! இன்று நிகழும் விவசாயிகளின் தற்கொலையில் 70 சதவிகிதம் மேல் பருத்தி விவசாயிகளே என்பது மிகவும் கொடுமையான விஷயம்.
ஆக மரபணு மாற்றுப்பயிர்களும் உணவும் எல்லா வகையிலும் கேடு விளைவிப்பவையே நமது அரோக்கியம் மற்றும் சின்னஞ்சிரார்களின் உடல் நலம் மற்றும் எதிர்கலாம் வரை. இதை எல்லா அரசியல் கட்சியினரும் நன்க‌றிவர்! அதனால் தான் எல்லா அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் மரபணுவை அனுமதிப்பதில்லை என்றே கூறி விட்டு ஆட்சியில் அமர்ந்ததும் மறந்து "வேறு சில காரணங்களால்" இதனை நம் மீது திணிப்பர். காங்கிரஸ் ஆட்சியிலிருந்த பொழுது பிஜேபி வன்மையாக கண்டித்தது. இன்றைய நிதி மந்திரி மற்றும் உள்துறை அமைச்சர் விவசாயிகளுடன் (ஆக்டிவிஸ்டுகளுடனும் தான்) தர்ணாவில் சில மாதங்களுக்கு முன் அமர்ந்து எதிர்ப்பை தெரிவித்தனர்! ஆனால் இன்று...?
ஒரு நாட்டின் இறையாண்மை அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பைப் பொறுத்தது. உணவுப் பாதுகாப்பு அங்கு நடைபெறும் வேளாண்மையைப் பொறுத்தது. வேளாண்மைக்கான இறையாண்மையோ விதைகளை அடிப்படையாகக் கொண்டது. எனவே விதைகள் மிகவும் இன்றியமையாதவை. இந்த விதைத் துறையில் நுழைந்துள்ள பெரும் நிறுவனம் மான்சாண்டோ. அது அறிமுகப்படுத்தியுள்ள பருத்திவிதை-பாசில்லஸ் துரிஞ்சியஸ் (Bt) மூலம் பல கோடிகளை சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டது! விதை ஒரு லாப மற்றும் ஆளுமைக்கான கருவி என்று மட்டுமே செயல்படும் கம்பனி! உலக விதை மற்றும் உணவு மேல் இப்படி ஆதிக்கம் செலுத்தி உலகின் குரல்வளையை பிடிக்கும் எண்ணம். பின்ன, படை எடுத்தா நம்மை வீழ்த்த முடியும்? (கிழக்கிந்திய கம்பனி ஞாபகம் வருகிறதா?)
உடனே நமது நாட்டு கம்பனிக்களே மரபணு விதைகள் கொண்டு வந்தால் என்று கெட்க வேண்டாம். விஷத்தை தாய் ஊட்டினால் விஷத்தன்மையற்று போய்விடுமா?

ஆக இந்த தேவையற்ற பதுகாப்பற்ற, பாதிப்புகள் நிறந்த தொழில்னுட்பம் நமது நாட்டிற்கும் விவசாயத்திற்கும் வரராமல் இருப்பது நலம்.

Comments

Unknown said…
Awesome.....Keep Blogging....Online Tamil News

Popular Posts