யாருக்கு வோட்டு போட வேண்டும்?



யாருக்கு வோட்டு போட வேண்டும்?

என்னையும் மதித்து சிலர் இந்த கேள்வியை கேட்டுக்கொண்டுள்ளதால் மாத்திரமே இந்த பதிவு. இந்த தேர்தலை பொருத்தவரை தமிழ்நாட்டிற்கு எந்த பெரிய மாற்றமும் வரவாய்ப்பில்லை என்று நான் நம்புகிறேன். நான் இந்த தேர்தலை பற்றி பெரிதாக அக்கறையும் கொள்ளவில்லை. 

இரு துருவ கட்சிகளில் எந்த மாற்றமும் இல்லை. மூன்றாவதாக உருவாகியுள்ள அணியால், துருவக்கட்சிகளின் பணபலத்தின் முன்னாலும், புஜ பலத்தின் முன்னாலும் எந்த அளவிற்கு தாக்கு பிடிக்கமுடியும் என்று எனக்கு சந்தேகம் உள்ளது. அவர்களை தேர்தலில் முன்னாலும், பின்னாலும் எளிதாகவே பிரிக்கமுடியும் என்றே நான் நினைக்கின்றேன். நாங்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளவர்கள் குறித்து தேர்தலுக்குப்பின் பெரிதாக பேச ஏதும் இருக்குமா என்றே தெரியவில்லை. 

தமிழகத்தின் அரசியல் நிலையை குறித்து நாம் அனைவரும் வருந்தவேண்டும். சாதாரண மக்களின் வாழ்கைக்கு அறவே தொடர்பில்லாத ஒரு நிலையில் அரசியல் தலைவர்கள் தங்கள் சொந்த தொலைகாட்சி நிலையங்களில் அமர்ந்து நாட்டை ஆளும் நிலை தமிழகத்தில் உள்ள சராசரி பெரும்பாலானவர்களின் அறிவுக்கும், உழைப்பிற்கும் ஒரு அவமானம். ஏதோ ஆட்சியை தொலைகாட்சி நிகழ்சி போல நடத்திவிடுவதாக அவர்கள் விடும் ‘போட்டிக்கு போட்டி’ அறிக்கைகள் அறுவறுக்கும் விதத்திலும், கீழ்த்தரவாகவும் உள்ளன. இதனைகண்டு மக்கள், இந்த தேர்தலை ஏதோ ஊர் கூத்து போல் நினைத்து, அறிக்கைகளின் சொல் ஜாலத்தையும், படைப்புத்திறனையும் கண்டு வியந்து கைதட்டி கண்டுகளிப்பது, அவர்களது உள்ளத்தில் உள்ள கோபத்தின் உண்மை பிரதிபலிப்பு அல்ல. தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் முயற்சி என்றே நான் நினைக்கின்றேன். 

தமிழகத்தில் அடிமட்ட அளவில் அரசியல் மாற்றம் வரவேண்டும், அதற்கு மிக அதிக அளவில் அடிமட்ட அளவில் உணர்வுப்பூர்வமான மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்றத்திற்கான வேலைகள் செய்வது அவசியம். இன்று பல இளைஞர்களால் இயக்கங்கள் உருவாகியிருப்பது மிகவும் முக்கியமான நிகழ்வு. ஆனால் அவர்கள் ஒரு தலைமுறையைதாண்டி சிந்திக்க வேண்டும், இன்று பல்வேறு இயக்கங்களை தோற்றுவித்தவர்கள் யாரும் என்றும் மந்திரிகளாகவோ, அல்லது முதல்வராகவோ ஆவது கடினம். அவர்கள் இதனை உணர்ந்து, இன்று 20களிலும், 30களிலும் உள்ள இளைஞர்களை ஊக்குவித்து அரசியல் அறிவு மற்றும் அடிமட்ட அளவிலான ஆக்கப்பூர்வமான வேலைசெய்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்துவதுதான் முக்கியமான் தொண்டு. அடுத்த 15-20 ஆண்டுகளில் தமிழகத்தில் உண்மை அடிமட்ட மாற்றம் வரும் என்பதில் நான் மிகவும் நம்பிக்கையாக இருக்கிறேன். 

சரி, யாருக்கு வோட்டு போட வேண்டும்? 

உங்கள் தொகுதியில் ஒருவரேனும் அடிமட்ட அளவில் வேலைசெய்ய தகுதியானவராய் தெரிந்தால், அந்த நபருக்கு உங்கள் வோட்டை போடுங்கள், அவர் சுயெச்சையாகவே இருந்தாலும் பரவாயில்லை, வெற்றிபெர வாய்ப்பே இல்லை என்று நீங்கள் நினைத்தாலும் சரி. இல்லையேல் 49-0 விற்கு வோட்டு போடுங்கள், நாட்டில் அதிக அளவில் 49-0 போட்ட ‘பெருமை’யை தமிழக மக்கள் தமிழக அரசியல் கட்சிகளுக்கு தொடர்ந்து அளிக்கும் பாடமாகவேனும் அமையட்டும். முதல்முறை வோட்டு போடுபவர்கள் யாவரும், நிச்சியமாக பிறர் சொல்கேட்டோ, அல்லது, திரைப்பட நடிகர்களின் படத்தை பார்த்தோ வோட்டு போடுவதை தவிர்க்கவேண்டும். சுயமாக சிந்தித்து, தங்களுக்கு அடுத்த 30 ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தகைய அரசியல் வேண்டும் என்று நிர்ணயித்து வோட்டு போட வேண்டியது அவசியம். 


ஆனால், காசுக்காக வோட்டு போடவோரை தயவுசெய்து கண்டிக்கவும். 

காசுக்காக வோட்டு போடுபவர்கள், அதற்கு பிறகு அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளைகுறித்து விமர்சிக்கும் உரிமையை இழந்து விடுகின்றனர். இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கிய திருப்புமுனை இந்த தமிழக தேர்தல். முன்பு ஒரு முறை, “திருமங்கலம் மாடல்” என்று காசுக்கு ஒரு தொகுதி வோட்டுகளை எவ்வாறு வியாபாரமாக்குவது என்று இடைத்தேர்தல் உக்திகளின் பாதாளத்தை காட்டிய பெருமை, தமிழகத்தை சேரும். இன்று ஒரு மொத்த மாநிலத்தின் தேர்தலை, வியாபாரமாக்கும் முனைவில் கட்சிகள் ஈடுபட்டுள்ள நிலையில், வியாபாரமாக்கப்படுவது வெறும் தனிமனித உரிமை மாட்டுமல்ல, அது, இந்திய இறையாண்மை என்பதை நாம் உணரவேண்டும். இந்த காசு மக்களின் வயிற்று எறிச்சலில் ஈட்டியது, இதனை வாங்கும்போது, சாதாரண மக்களின் சாபத்தையும் சேர்ந்து வாங்குகிறோம் என்பதை மக்கள் உணரவேண்டும்.

Comments

Popular Posts