"எனக்கு பயமா இருந்துச்சி"!!


"எனக்கு பயமா இருந்துச்சி" என்று ஒரு அரசு அதிகாரி கூறினால் அதற்கு "ஜாமீன் இல்லாமல் காவல் நீட்டிப்பு" நடக்கலாம் என்பது பியூஷ் மனுஷ் விஷயத்தில் அம்பலமாகியுள்ளது.

ஒரு ரோடு போடுவதை நிறுத்துவதற்காக, ஆக்கிரமிப்புகளை, தேவையான முன் அறிவிப்பின்றி அகற்றுவதற்காக தங்களை தாங்களே அந்த அகற்றுகின்ற இயந்திரத்துடன் இணைத்து கொண்ட ஆர்வலர்களை எப்படி ஒரு காவல் அதிகாரி, "இதனால் இங்கு வேலை செய்யும் அரசு அதிகாரிக்கு ஆபத்து ஏற்படும்" என்று கூறுகின்றார்?

இதனை கேட்ட ஒரு நீதிபதி எவ்வாறு, "ஆமாம், அப்படித்தான் தெரிகிறது, அதனால் ஜாமீனை மறுக்கிறேன்" என்று கூறுகிறார்?

இந்த சம்பவத்திலும், அதனை தொடர்ந்து இந்த வழக்கை போலீஸ் தரப்பிலும் அரசாங்க தரப்பிலும் நடத்தையை பார்க்கையிலே, இது பியூஷ்  என்கின்ற தனி நபரை குறிவைத்து ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகின்றது. கான்டராக்டருக்கு விட்ட ஒரு பணியில் அரசாங்க அதிகாரி என்ன செய்து கொண்டிருந்தார் என்பது முதல், அந்த அரசாங்க அதிகாரி தாக்கப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லாத பட்சத்தில்,

தமிழகத்தில் ஏரிகளை தூர்வாரி அதனை சுத்தப்படுத்தி மக்களால் நினைத்தால் தங்களை தாங்களே காத்துக்கொள்ள இயலும் என்கின்ற நிதர்சனத்தை உணர்த்தும் விதத்தில் பணி செய்யும் பல இளைஞர்களின் ஹீரோ, பியூஷ். இவரது துணிச்சலும், துரித வேலைப்பாடும், மக்களை ஒன்று திரட்டி செயல் படுத்தும் விதமும் கடந்த சில வருடங்களில் பல முயற்சிகளை வெற்றிகரமாகி நிறைவேற்ற முடிந்துள்ளது. இவரை கண்டு பல இளைஞர்களும், தங்கள் பகுதியில் இவரை போன்றே வேலை செய்வதற்கு முயன்று வருகின்றனர். இன்று தமிழகத்தில் இளைஞர்களை வழிகாட்ட அரசியல்வாதிகளும், சினிமாகாரர்களும் தவிர வேறு யாரும் இல்லாத தருணத்தில், இவரது செயல்பாடுகளும், முயற்சிகளும், இளைஞர்களுக்கு உற்சாகமும், உத்வேகமும் அளித்துள்ளது. சமூக ஆர்வலர் மத்தியில் பியூஷ் செய்துவரும் ஆக்கப்பணிகள் மிகவும் மதிக்கத்தக்கதாகவும், மரியாதை அளிக்கும் விதத்திலும் அமைந்துள்ளது. இதனால் அவருடைய பணிகளுக்கு கடந்த 2 வருடங்களாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், மரியாதையும் ஏற்பட்டுள்ளது.

இவர் வேலைக்கு பல எதிரிகள் இருப்பது உண்மை. இன்று உண்மையாக மக்களுக்கு யாரேனும் உழைத்தால் அவருக்கு நிச்சியமாக மிகவும் அதிகாரமும், பணபலமும் படைத்த பலரும் எதிரியாக இருக்கவே வேண்டும். ஆனால், அவற்றை எல்லாம் விட முக்கியமாக கடந்த ஒரு மாத காலமாக, பியூஷ், ஒரு இளம் பெண்ணின் தற்கொலை குறித்த காவல் துறையின் அலட்சிய போக்கை கண்டித்து பல கூட்டங்களை ஏற்பாடு செய்தும், செய்திகளை வெளியிட்டும் வந்துள்ளார் என்பது, இதனால், காவல் துறை அவர் மேல் கடும் கோபத்தில் உள்ளது என்பதும் உண்மை. இதனாலேயே அவரை எந்த ஒரு விஷயத்திலேனும், உள்ளே தள்ளி "கவனிக்க" அவர்கள் முயன்றிருக்கலாம் என்றே தோன்றுகின்றது.

மிகவும் கண்டிக்கத்தக்க இத்தகைய போக்கை காவல் துறையினர் சராசரி மக்களின் உணர்வுக்கோ அல்லது நியாயத்திற்க்கோ எந்தவிதத்திலும் கட்டுப்படாமல், "நீதியின்" அனுமதியுடனும்,ஆசியுடனும் செயல் படுத்த முடியும் என்றால் மிகவும் வருத்தம் அளிக்கின்றது. இதை பார்க்கையில் ,தமிழக சட்டம் ஒழுங்கு குறித்து பல கேள்விகள் எழுகின்றன.

ஆனால், தமிழக போலீசார் மாத்திரமே காரணம் என்று நான் நினைக்கவில்லை.  

இன்று நமது மத்தியில் பசுமை போராளிகளை ஏதோ தேச துரோகிகளை போல் சித்தரிக்கும் போக்கு கடந்த 2014ஆம் ஆண்டு மத்தியில் ப.ஜா.கா. ஆட்சி வந்த முதல்நாளிலிருந்து துவங்கிவிட்டது. இதற்கு இந்த மத்திய அரசாங்கத்துடன் பல மிக சக்திவாய்ந்த பன்னாட்டு (இந்திய) கொம்பனிகளின் உறவு ஒரு முக்கிய காரணம். கிரீன்பீஸ் என்கின்ற உலகளாவிய பசுமை இயக்கத்தின் இந்திய அலுவலகத்தை முடக்க இந்த அரசு முற்பட்டது நாம் அறிந்ததே. இந்த நிறுவனத்தின், பிரியா பிள்ளை, பன்னாட்டு மாநாட்டிற்கு செல்வதை அனுமதிக்கவும் இந்த அரசாங்கம் அவரது பாஸ் போர்டை முடக்கியது நினைவிருக்கலாம். அதனை போலவே, நமது தமிழகத்தின் கடைக்கோடியில், இடிந்தகரையில் இன்றும் போராடிவரும் சாதாரண மக்களை, ஏதோ, இவர்களால் நாட்டிற்கும், இறையாண்மைக்கும் ஆபத்து வந்துவிட்டதுபோல் சித்தரித்து, அதற்கு, மறைந்த முன்னாள் ஜனாதிபதி, திரு. அப்துல் கலாம் போன்ற நல்ல மனிதர்களை கூட விட்டு வைக்காமல் நமது அரசாங்கங்கள்  பயன்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது. சமீபத்தில், பாதுகாப்பான உணவு குறித்து போராடிவரும், கவிதை குருகண்டி போன்ற ஆர்வலர்களைக்கூட சாடி, அவர்களது போராட்டங்களையும், அவர்களையும் குறிவைத்து பல ஊடக செய்திகள், பன்னாட்டு கொம்பனிகளின் ஆதரவாளர்களால், அதால் பயனடையும் சில, "ஊடக வல்லுனர்களும்" எழுதி வருகின்றனர்.

உண்மையில் இவர்கள் அனைவரும்,  இந்த நாட்டிற்கோ அல்லது நாட்டின் மக்களுக்கோ ஆபத்து வருவதை தடுப்பதைதான் தங்கள் பணி மூலம் செய்துவருகின்றனர். மற்றொரு காலத்தில் இத்தகைய மக்களை  நாடும், போற்றி, அவர்களை தலைவர்கள் என்று ஏற்றுக்கொள்ளும் என்றே தோன்றுகிறது. ஆனால் இன்று நமது கெட்ட காலம், கொள்ளை அடிப்பவனும், சாராயம் விற்பவனும், சூது செய்பவனும் தலைவன் என்றாகி விட்டபடியால், இவர்களை "எதிரிகள்" என்று நாடு சித்தரிக்கின்றது.

நமது பணி, "தர்ம கூச்சல்" ஓயாது செய்வது என்று இயற்கை விவசாய சிந்தனையாளரும் விவசாயியும் ஆன திரு. கோமதிநாயகம் அய்யா அடிக்கடி கூறுவார். ஆக்க பணி செய்பவர் யாவரும், தர்ம கூச்சல் போடுவதை நிறுத்தக்கூடாது. இன்று பியூஷ்ஐ  குறிவைத்து தாக்குபவர்கள், நாளை சாமான்ய மக்கள் பலரையும் இது போல தாக்க முற்படுவார்கள். ஒவ்வொரு முறை அவ்வாறு தாக்கப்படும் பொழுதும்,, சேர்ந்து நின்று, தாக்குதலை எதிர் கொள்ளுவதிலேயே, உண்மை நிலவும் என்று தோன்றுகிறது.

Comments

Popular Posts