தீபாவளி லேகியத்தின் ரகசியம்!!
50 வருடங்களாக தொடர்ந்துவரும் பாரம்பரிய தீபாவளி லேகியம்
ரா. பாலசுப்ரமணியம் |
அவர் ஒவ்வொரு ஆண்டும் செய்யும் இந்த மருந்து எங்கள் குடும்பத்திலும், சொந்தங்களின் மத்தியிலும் மிகவும் பிரசித்தி. தீபாவளிக்கு பல வாரங்களுக்கு முன்பே, பலரும், "மாமா எனக்கு ஒரு டப்பா பார்சல்" என்று தொலைபேசியில் ஆர்டர் கொடுக்க துவங்கி விடுவார்கள்.
அவரது மருந்து பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கத்தை கீழே காண்போம் -
மருந்து பொருட்கள் உள்ளடக்கம் -
1. சுக்கு - 200 கி
2. மிளகு - 10 கி
3. அரிசி திப்பிலி - 10 கி
4. கண்டன் திப்பிலி - 10 கி
5. சித்தரத்தை - 10 கி
6. அதி மதுரம் - 10 கி
7. வால் மிளகு - 5 கி
8. வெள்ளை மிளகு - 5 கி
9. வாய் விளங்கம் - 5 கி
10. பறங்கி சக்கை -ஒரு சக்கை, ஆள்காட்டி விரல் நீளம்
11. நெல்லி முள்ளி - 10 கி
12. தனியா - 10 கி
13. வெந்தையம் - 5 கி
14. ஏலக்காய் - 5 கி
15. ஜாஜிக்காய் - 1
16. மாஜிக்காய் - 2
17. கடுக்காய் - 2
18. மராட்டி மொக்கு - 5 கி
19. கிராம்பு - சிறிதளவு (5)
20. கல்கண்டு - 100 கி
21. தேன் - 200 மில்லி
22. நெய் - 1 கிலோ
23. வெல்லம் - 1 கிலோ
24. விரலி மஞ்சள் - 1 துண்டு
25. ஜீரகம் - 2 தேக்கரண்டி
26. பெருங்காயம் - 1 துண்டு (5 கி)
27. வசம்பு - 5 கி
28. காய்ந்த ரோஜா இதழ் (பன்னீர் ரோஜா மட்டும்) - 50 கி
29. கசகசா - 10 கி
30. வெள்ளை கடுகு
31. ஓமம் - 10 கி
(மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து விற்கும் கடைகளிலும், மளிகை கடைகளிலும், தமிழகம் முழுவதும் எளிதாக கிடைக்கின்றன).
செய் முறை விளக்கம் - நெய், வெல்லம், தேன், கற்கண்டு தவிர மற்ற பொருட்களை மிதமாக வறுத்து, அரைத்துக்கொள்ள வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், வருத்தல் இந்த மருந்து தயாரிக்க அவசியம் இல்லை, அரைத்தலுக்கு அவற்றை எளிதாக்கவே அவற்றை சூடாக்கும்வரை வறுக்க வேண்டும். அதிக வறுபட்டால், மருந்தின் தன்மை மாறிவிடும், ஆகையால் வருத்தல் என்பது வெறும் சூடாக்கும் வரை தான்.
வஸ்தரகாயம் - இது யாருக்கும் இன்று தெரியாத ஒரு வார்த்தை, அதாவது ஒரு வெள்ளை நைஸான வஸ்திரத்தை (வேட்டி துணி) வைத்து இந்த அரைத்த மருந்து பொருட்களை நன்றாக ஜல்லிக்க வேண்டும்.
இப்போது மொத்த மருந்து பொடி எந்த அளவிற்கு உள்ளது என்று அளவு பார்க்கவேண்டும். அவ்வாறு அளந்த மருந்துக்கு, ஒன்றரை அளவு பொடித்த வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் இந்த வெல்லத்தை நன்றாக கரையும் அளவு தண்ணீரில் கரைத்து, அதில் உள்ள கசண்டும், மண்ணு ஆகியவற்றை வடிகட்ட வேண்டும் (வெல்லத்தை காய்ச்சும்போது இவை கீழே தங்கிவிடும், அவற்றை நன்றாக வடிகட்ட வேண்டும்). இதற்க்கு பிறகு வெல்லத்திற்கு இன்னும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, "கம்பி பாகு" வரும்வரை காய்ச்ச வேண்டும்.
கம்பி பாகு - வெல்லம் கொண்டு வீட்டில் பதார்த்தம் செய்வதற்கு, பாகு வைப்பது முக்கியம், அதில் பதம் பார்ப்பது ஒரு கலை. கம்பி பாகு என்பது, பாகை, கரண்டியிலிருந்து காய்ச்சும் பாத்திரத்தில் விட்டால், அது ஒரு கம்பி போல, தொடர்ந்து, இடைவிடாமல் வரும் பக்குவத்திற்கு காய்ச்ச வேண்டும்.
இப்பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக மருந்து பொடியை இந்த வெல்ல பாகில் சேர்த்து, கட்டி தட்டாமல் கிளறிக்கொண்டே கலக்க வேண்டும். இது நன்றாக கலந்த பிறகு, இதனுடன் நெய்யை கொஞ்சம் கொஞ்சமாக கலக்க வேண்டும். நெய்யை அந்த மருந்து கலவை நன்றாக உறிஞ்சிக்கொள்ளும்.
லேகியத்தை பதம் - இப்போது தான் மிக முக்கியமான கட்டம், லேகியத்தை கையில் எடுத்து உருட்டினால், அது ஈஷாமல், ஒட்டாமல், திரண்டு வரவேண்டும். இது தான் சரியான பதம். இந்த பதம் வந்ததிற்கு பின்னர், நெய் சேர்ப்பதை நிறுத்திவிடவேண்டும்.
தீபாவளி லேகியம் |
லேகியத்தை அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு, தேனையும், கற்கண்டையும் இத்துடன் கலக்க வேண்டும். இத்துடன் தீபாவளி லேகியம் தயார். நன்றாக ஆறிய பிறகு, அதனை காற்று புகாத நல்ல டப்பாவில் அடைத்து பாதுகாக்கவும்.
இவ்வாறாக தயாரித்த லேகியத்தை, மூன்று மாதங்கள் வரை வைத்துக்கொண்டு சாப்பிடலாம். தினமும் ஒரு சிறு நெல்லி அளவிற்கு, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மழைக்காலத்திற்கு எந்த உபாதைகளும் இல்லாமல் உடலை பாதுகாக்கும் வேலையை இந்த தீபாவளி லேகியம் செய்கின்றது.
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் அளவு செய்ய இந்த லேகியம் மிகவும் உதவியாக உள்ளது. வயிற்று பிரச்சனை, சளி மற்றும் ஜுரம் இந்த மழைக்காலத்தில் நமது உடம்பில் எதிர்ப்பு சத்து அதிகம் இல்லாததால் எளிதில் பற்றிக்கொள்ளும், இந்த லேகியத்தை தினமும் உட்கொள்ளுவதினால் உடலின் நோய் எதிர்கொள்ளும் சக்தி அதிகரிக்கின்றது.
நமது மரபு, "உணவே மருந்து, மருந்தே உணவு" என்கின்றது. இத்தகைய மூலிகை மருந்து வீட்டிலேயே தயாரிப்பதில் மூலம் நாம், நமது பாரம்பரிய அறிவு, மரபின் மாண்பு, மூலிகைகளின் பாதுகாப்பு, நமது உடல் ஆரோக்கியாம் ஆகியாவற்றிற்கு ஒரு சேர பாதுகாக்கவும், நிலைநாட்ட முடியும்.
திரு. பாலசுப்பிரியமணியம் அவர்களின் சார்பிலும் நமது சார்பிலும் அனைவருக்கும் ஆரோகியமான தீபாவளி வாழ்த்துக்கள்!!!
"எங்களுக்கு பார்சல் அனுப்புவீங்களா", "செஞ்சி கொடுப்பீங்களா", என்ற கேள்விகளை தவிர்க்கவும்.
Comments