தூத்துக்குடி: எல்லாவற்றிலும் எதிரியை காண்!!
அவ்வையாரின் ஆத்திச்சுவடியிலேயோ அல்லது பாரதியின் புதிய புனைவிலேயோ இந்த வாசகம் இடம்பெறவில்லை. ஆனால் இன்று பெரும்பாலான மக்களின் சமூக பார்வை இந்த வரியைக்கொண்டு வருணிக்கலாம்.
நேற்று தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லையிட் ஆலையின் நச்சுத்தன்மையை எதிர்த்தும் அதனை மேலும் விரிவாகுவதனை எதிர்த்தும் சாமானிய மக்கள் நடத்திய போராட்டத்தின் நூறாவது நாள், மக்களின் எதிர்ப்பை எப்படி சமாளிப்பது என்று ஆலையின் நிர்வாகமும் அரசாங்கமும் இணைந்து சிந்திதித்திருக்க வாய்ப்பில்லை. எதிர்ப்பு 100 நாட்கள் நடந்து வந்ததும் அதற்க்கு பல கட்சிகளும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்தும், மக்களே, அதுவும் உள்ளூர் மக்களே இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியுள்ளது பாராட்ட தக்கது.
இருந்தும் 100வது நாள் போராட்டம் வன்முறையாக மாறியது. இதுவரை 13 பேர் காவல் துறையின் துப்பாக்கிசூட்டில் காலமானார், கொல்லப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் போராளிகளோ அல்லது தீவிரவாதிகளோ அல்ல. இவர்கள் நம்மைப்போல் சாமானிய மக்கள். தூத்துக்குடியில் நேற்று இருந்து அந்த மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதனால் கொல்லப்பட்டனர். இன்று மீண்டும் காவல் துறை சுட்டதில் விளைவாக மேலும் ஒருவர் இறந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம், அங்கிருந்து வந்த ஊடக படங்களை பார்க்கையில், மிகவும் வேதனையாக இருந்தது, பிறகு கோபம், "சாமானியர்கள் ஏன் இவ்வாறு சாகடிக்கப்படவேண்டும்?", "இந்த வன்முறையை தவிர்த்திருக்க முடியாதா?", "ஏன் யாரும் இதற்க்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை?" என்று வேதனையில் என்னென்னவோ கேள்விகள்.
இன்று காலை முதலே, ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும், நேற்றைய நிகழ்விற்கு அர்த்தம் கற்பிக்கும் விதத்தில் நடக்கும் முயற்சிகளை காணும்பொழுது இன்னமும் வேதனை பிறக்கின்றது.
ஒவ்வவொருவரும் தங்களுக்கு யார் எதிரியே அவர்கள்தான் இந்த நிகழ்விற்கு காரணம் என்று கூற விழைகின்றனர். ராகுல் காந்தி, இதனை ஆர்.எஸ். எஸ். சாதி என்கின்றார். ப.ஜெ.க. இத்தனை காங்கிரெஸ் காரர்கள் காலத்தில்தான் நிறுவினார் என்று பழிக்கின்றனர், தி.மு.க. ஆ.தி.மு.க. அரசை கலைக்க கேட்கிறது, ஆ.தி.மு.க. அரசோ, "நாங்கள் எதையும் புதிதாக செய்யவில்லை, எல்லாம் அந்த காலம் முதலே அம்மா வழியில்..." என்கின்ற பாட்டு இந்த தருணத்தில் செல்லாது என்பதை உணர்ந்து, ஏதோ பிதற்றிக்கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் உலாவும் இடதுசாரி என்றும் வலதுசாரி என்றும் தினம் தினம் வேலையில்லா வசைபாடும் கும்பலோ, ஒருவரை ஒருவர் வசைபாட இன்று இந்த கொலைகளை கையில் எடுத்துள்ளனர். தனி தமிழகவாதிகள் இதனையும் 'வடக்கிந்திய சதி' என்று ஒரு புறம் வசைபாடுகின்றனர். மக்களை சிந்திக்கவிடாமல் தொல்லைகொடுத்து திரியும் ஊடகங்களுக்கு இது ஒரு 'போநஸ்' திருவிழாவாக காதுவலிக்க கத்தி திரிகின்றனர், வேதனையளிக்கும் படங்களை மீண்டும் மீண்டும் போட்டு நமது வருத்தத்தை தங்கள் வியாபாரமாக்க விழைகின்றனர். புதிதாக பிறக்கவிருக்கும் கட்சிகளின் நாயகர்களோ, "யார் துப்பாக்கி சுட சொன்னார்கள்?", "இதற்க்கு யார் பொறுப்பு ஏற்க வேண்டும்?" போன்ற தொழில்நுட்ப ரீதியிலான, தங்களை அறிவாளிகளாக காட்டிக்கொள்ளும் விதத்தில் கேள்விகளை எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் வன்முறை வெற்றிகரமாக தூண்டிவிடப்பட்டுள்ளது. எந்தப்புரம் கல் முதலில் வந்தது, யார் அடித்தார்கள் என்பது ஒரு விவாதத்திற்க்கான கேள்வியாக இருந்தாலும், ஒரு புதிய கலாச்சாரம் நம் முன்னே நமது மாநிலத்தில் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் இத்துடன் முடியாது. இது தொடரும் என்று அஞ்ச தோன்றுகின்றது. வன்முறை தமிழகத்தில் இல்லாமல் இல்லை. ஆனால் பெரும் அளவில் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது அரசாங்கத்தின் வாயிலாகவோ இதுவரை கடந்த 30 ஆண்டுகளில் எனக்கு நினைவு தெரிந்து நிகழவில்லை (கூடங்குளத்தை நான் இங்கு சேர்க்கவில்லை, அது ஒரு தொடர் கதை). இது புதிது. 2 தலைமுறை இந்த மாநிலத்தில் வன்முறையை காணாது வளர்ந்துள்ளது அவர்களுக்கு இது புதிது. வெறும் திரைப்படங்களில் மாத்திரமே காணும் வன்முறை, சிறு சிறு உள்ளூர் மோதல்களில் சில சமயங்களில் தலை தூக்கினாலும், பெரும்பாலும் அமைதிக்கு என்றும் அடைக்கலம் தரும் புகலாகவே நாம் இருந்திருக்கின்றோம். இது இப்பொழுது மாற்ற படுகின்றது.
பொது இடங்களில், விவாதங்களிலும், சமூக வலைத்தளங்களிலும், இதர இடங்களில், சொல்லளவிலும், செயல் அளவிலும் நாம் அமைதியை நிலைநாட்ட தவறினோம் என்றால், இந்த வன்முறை இன்னமும் தொடரும் என்று எனக்கு தோன்றுகிறது. இதனால் பயன் அடைய பலரும் காத்துக்கொண்டுள்ளனர். அரசியல், பொருளாதாரம், சமூக பிளவு, மதரீதியிலான தீவிரவாதம், வன்முறைக்கு தேவையான உபகரணங்களின் விற்பனை என்று தமிழக வன்முறை வளர்ச்சியை கவனமாக நோக்கும் பல வியாபாரிகள் நம்மை சூழ்ந்துள்ளார்கள்.
தமிழர்கள் நமது மக்கள், தென் கோடி குமரி முதல் வடகோடி சென்னை வரை, மேற்கிலே கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்கள் முதல், கிழக்கே கடல்வரை நாம் இங்கு குடியிருக்கும் மக்கள் அனைவரும் நம்மவர்கள். இங்கு பல வேறுபாடுகள் உண்டு, ஆனால், ஒற்றுமை பலவும் உண்டு, இங்கு தமிழையே பல மொழிகளாக பேசுகிறோம், ஆனால், அனைவரும் தமிழைதான் பேசுகிறோம். அமைதியை என்றும் விரும்பும், சுதந்திர மக்களாகவே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்துவிட்டோம். வன்முறை நம்மை சோதிக்கிறது, வீழ்வதும், அமைதியை ஆழப்படுத்தி நின்று வெல்வதும் இன்று நம் கையில் உள்ளது. தூத்துக்குடி மக்கள் தமிழகத்தின் வியாபார வல்லுநர்கள், அவர்களின் உழைப்பும், உறுதியும், தங்கள் உற்றார்மேல் அவர்கள் பொழியும் பரிவும் தமிழக மரபின் முக்கிய அச்சாணிகள். அவற்றை அமைதியாகவும் உறுதியாகவும் பறைசாற்றுவோம், தமிழர்களாக ஒன்றாய் நிற்போம், அமைதியை வன்முறைக்கு அடிமையாகும் முயற்சியை முறியடிப்போம்.
காந்திக்கு உறுதியிலும், எளிமையிலும் பாடம் சொன்ன நாடு, இன்று இந்தியாவிற்கு வன்முறையை எதிர்க்கும் பாடம் சொல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. வருத்தத்தில் வீழ வேண்டாம். நிற்போம், வெல்வோம்.
Comments