கொடிக்கம்பம் சொல்லும் கணக்கு...


அரசியல்வாதிகள் மக்களிடம் உள்ள வாக்களிக்கும்  அவசியத்தையும், மக்கள், தங்கள் ஊர் அரசியல்வாதிகளின் சொத்தின் மதிப்பையும், துல்லியமாக கணக்கிடும் தேர்தல் காலம்.  அவரவர் மனம் வந்தாற்போல், சந்திக்கும் எல்லாரிடமும், 'நீங்க என்ன நினைக்கிறீங்க?' என்று துவங்கி ஒரு சில வினாடிகளிலேயே, நாம் என்ன நினைக்கிறோம் என்று நீட்டி முழக்கி, காரசாரமாக விவாதிக்கும், விபரீதமான வியாதிக்கான காலமிது. ஏனோ, சமூக வலைத்தளங்கள் வந்ததிலிருந்து, நேருக்கு நேர் விவாதிக்கும் பாங்கு தமிழகத்தில் குறைந்துள்ளதாக எனக்கு தோன்றுகிறது.


வீட்டு வாசலில் ஒரு வி.சி.க. கொடிக்கம்பம். 3 மாதங்களுக்கு முன்னர் வெகு விமரிசையாக, திருமா அவர்களால் கொடி ஏற்றி துவங்கப்பட்டது. என் வீட்டின் பின்புறம் வீட்டில் இந்த கட்சியை  சேர்ந்த ஒரு 'பெரிய தலை' வாழ்வதாக தெரிந்தது. 3 வண்டிகள் எப்போதும் தயார் நிலையில் கட்சி கொடியுடன் இருப்பதும், எப்போதுமே, தமிழகத்தில் எல்லா கட்சிகளுக்கும் இருப்பதுபோல் ஒரு 4-5 பேர், வேத்தாக  தெரு ஓரத்தில் கதை அடித்துக்கொண்டும், அவ்வப்போது, எங்கள் வீட்டின் முன்னர் உள்ள கையேந்தி உணவகத்தில் சாப்பிட்டும் வரும் வழக்கத்தை கவனித்ததினால், இந்த பெரிய தலை, கொஞ்சம் பசையுள்ள பெரிய தலை என்றே தோன்றியது.

கொடிக்கம்பம் நிகழ்ச்சி அதற்க்கு சான்று. ஏறத்தாழ ஒரு 200 பேராவது திருமா கொடி  ஏற்றியபொழுது உடனிருந்தனர். பட்டாசும், பறை முழக்கமும், கோஷமும் போட்டிபோட்டுக்கொண்டு எங்கள் அனைவரின் மாலை பொழுது, தொலைக்காட்சிக்கு அவசியமில்லாமல் செய்தது. கொடிக்கான மேடை ஒரு ஆளுயரத்திற்கு கட்டியிருந்தார்கள், அதன் மேல் கம்பம், நல்ல கனமான இரும்பு, இருபதடிக்கும் மேல் உயரமான கொடிக்கம்பம், முழுவதும் அவர்களது கட்சியின் சாயம் பூசி அதன் மேல் பெரிய கொடி.

 சமீப காலங்களில், பெரிய கொடிகள் எங்கும் உள்ளது ஆச்சிரியமாக உள்ளது. முன்பெல்லாம், கட்சிக்கொடி ஒரு மேல்துண்டு அளவிற்குத்தான் இருக்கும், இப்பொழுது கட்சி கொடிகள் எல்லாம் 2 வேட்டி நீளம் இர்ருக்கும்போல் தெரிகிறது. இந்த மாற்றம் ஏன் என்று தெரியவில்லை. ப.ஜா. க. ஆட்சிக்கு வந்தவுடன் அணைத்து பொது அரசு அலுவலகங்களின் முன்னரும் பெரிய தேசிய கொடியை இதேபோல் பெரிதாக பறக்கவிட்டுள்ளார். ஏன் என்று தெரியவில்லை. சென்னை விமான நிலையத்தில், வாடகை வண்டி வரவழைக்க எங்கு காத்திருக்கின்றோம் என்று அடையாளம் சொல்ல  இப்பொழுது அது பயன்படுகிறது. சமீபத்தில் ஒரு மத்திய அமைச்சர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் முன்னர் இதே போன்று கொடியை பறக்கவிவேண்டும் என்று சொன்னதாக செய்தியில் படித்தான். ஏன் என்று தெரியவில்லை. இந்த கொடியை பார்த்தால், எனக்கு எந்தவிதத்திலும் ஒரு உணர்வும் வரவில்லை. "எவ்வளவு சீக்கிரம் கிழியப்போகுது" என்றும், கிழிந்தால் இதனை மாற்றுவதற்கு மற்றொரு கொடியை இவர்கள் தைக்க எவ்வளவு நாட்கள் ஆகும் என்கின்ற தேவையற்ற சின்னச்சின்ன சிந்தனைகள்தான் எனக்குள் வருகின்றன.

எனக்கு இந்த பெரிய கொடிகளை பார்க்கும் பொழுதெல்லாம், இதே  கேள்வி, இதனை யார் பராமரிக்கிறார்கள்? அரசாங்க அலுவலகத்திலாவது இதெற்க்கென்று எங்கேனும் ஒரு பட்ஜெட் ஒதுக்குவார்கள், காட்சிகள் எப்படி சமாளிக்கின்றன? சில இடங்களில் அடிக்கடி கிழிந்துவிடும் போல் தெரிகிறது. விழுப்புரம் அருகே ஒரு இடத்தில் இப்படி ஒரு பெரிய தி.மு.க. கொடியை  தேசிய நெடுஞ்சாலை அருகே பார்த்தபொழுதும் இதே கேள்வி எனக்கு தோன்றியது. சமீப காலங்களில்  கிழக்கு கடற்கரை சாலையில், "அந்த" விடுதியின் அருகாமையில் ஒரு ஊருக்கு வெளியே, ஆ. தி. மு.க. கொடியும் வேட்டி நீளத்திற்கு பறந்து கொண்டிருப்பதை பார்த்தேன்.

சரி கதைக்கு வருவோம்.  3 மாதத்தில் அந்த வி.சி.க. கொடி கிழிந்துதான் இருந்தது. சமீபமாக கட்சிக்காரன் யாராவது கண்ணில் பட்டால் சொல்லலாம் என்று இருந்தேன், தேர்தல் நேரத்தில் கிழிந்த கொடி கொஞ்சம் மாற்றுங்கள் என்று...ஆனால், நேற்று மாலை நடந்து வரும் பொழுது ஒரு சலசலப்பு. வி.சி.க. காட்சியை சேர்ந்தவர்கள் சிலர் தங்கள் கைபேசியில் ஏதோ படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். என்னவென்று பார்த்தால், அதன் அருகாமையிலேயே அந்த கொடி கம்பத்தில் சரி பாதி அளவிற்கு ஒரு ப.ஜெ.க. கொடி அவதரித்திருந்ததை கண்டேன். எந்த வித சலசலப்பும் இன்றி இந்த கொடி அவதரித்திருக்கவேண்டும், கொடி நடுவதையோ அல்லது ஏற்றப்படுவதையோ யாரும் பார்த்ததாகவே தெரியவில்லை. ஆனால் இப்பொழுது அந்த கொடி அங்கு தோன்றிவிட்டது, அவர்களது ஆட்சியை போல.

எனக்கு என்றும் இந்தியாவின் பி.டி. பருத்தி திருட்டுத்தனமாக ஊடுருவிய கதை நினைவுக்கு வரும். யாருக்கும் தெரியாமல் ஆனால் எல்லார் கண்ணுக்கும் முன்னால்  நடத்தப்படும் திருட்டென்பது மிக பண பலத்துடனும், அசாதாரண துணிச்சலுடனும், எதையும் அடக்கிவிடலாம் என்கின்ற வன்முறையும் சேர்ந்தே இருந்தால்தான் முடியும். இந்த கொலை விதை அப்படிதான் இந்தியாவில் பரவியது, சில இயக்கங்களும் அப்படிதான்.

வி.சி.கே. கட்சிக்காரர்கள் இப்பொழுது தங்கள் கொடிக்கோ, கொடி கம்பத்திற்கோ அல்லது கொடி பீடத்திற்க்கோ ஏதேனும் இதனால் பாதிப்பு இல்லையே என்பதை பார்த்துவிட்டு, படமெடுத்துவிட்டு அவர்கள் இடங்களுக்கு சென்றுவிட்டனர்.  ப.ஜ.க. கொடியென்னவோ துண்டு நீளத்திற்குத்தான் இருக்கிறது, ஆனால் அதனை சுற்றி பாதுகாப்பிற்கோ அல்லது வெட்டி பேச்சிற்க்கோ ஆட்கள் சேருவதாக நான் காணவில்லால். தொடர்ந்து செல்லும் ரோந்து போலீஸ்காரர் இப்போது அந்த கொடி கம்பத்தையும் சேர்த்து தனது ரோந்தில் பாதுகாப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

நம்ம ஊரு கட்சிக்கும், வடநாட்டு கட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தேன். நமது வியாபாரத்திற்கும் அவர்களது வியாபாரத்திற்கும் இது பொருந்தும் என்றே தோன்றுகின்றது.

நமக்கு ஆட்கள் அவசியம், அவனுக்கு அது அவசியமில்லை, நாம் தேவைக்கு அதிகமாக செலவு செய்வோம், அவன் எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் செய்வான், நாம் இதற்காக ஒரு குழுவையே வெட்டியாக நிறுத்தி வைக்கிறோம், அவன் அரசாங்க சம்பளம் வாங்குபவனையே  தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறான், நமக்கு 'விழாக்கள்'  தேவைப்படுகின்றது, அவனுக்கு வெறும் வியாபார விஸ்தரிப்பு மாத்திரமே குறிக்கோளாக இருக்கிறது. நாம் யாரும் கணக்கு போடுவதில்லை, அவன் ஒவ்வொரு அடியிலும் கணக்கு பார்க்கிறான்.  நாமாய் கொஞ்சம் திருந்தாவிட்டால், நம்மை திருத்த முடியாது. 

Comments

Popular Posts