தமிழக அரசியலுக்கு ஏன் ரஜினிகாந்த் வருவது நல்லதல்ல.... #1

 சமீபத்தில் ரஜினி முதல் முறையாக நாடு முழுவதும் எதிர்ப்பை சந்தித்துள்ள குடியுரிமை சட்டத்தை பற்றி தனது கருத்தை உரைத்தார். நடுவண் அரசுக்கு சாதாகமாகவும், மக்கள் இதனை எதிர்ப்பது தவறானது என்றும் அவரது கருத்து நிலவியது. சமீப காலங்களில் இரண்டாவது முறையாக அவர் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருப்பது ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும்,  அன்றாட கிண்டலுக்கும், சாடலுக்கும், இரண்டு நாட்களாக நடந்து வருகிறது. இன்று மற்றொரு செய்தி, அவர் சித்திரை மாதம் சொந்த கட்சி தொடங்க உள்ளதாகவும் அதற்ப்ப்குப்பின் தமிழகம் முழுவது சுற்றுப் பயணம் செய்ய உள்ளதாகவும், மிக பெரிய கூட்டணி அமைக்க உள்ளதாகவும் அதன் பின்னர் இந்த கூட்டணியை கொண்டு தமிழகத்தின் தேர்தலில் வெற்றி பெற்று விடுவார் என்கின்ற தொனியில் ஒரு செய்தி வெளியானது.

அவரது அரசியல் அணுகுமுறை  இந்த ஒரு சர்சைக்குரிய கொள்கையில் அவர் எடுத்துள்ள நிலைப்பாட்டினை கொண்டு ஆராயவதின் மூலம் கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

#1: இயற்க்கை வளங்களை அழிக்கும் எந்த ஒரு முயற்சியையும் தமிழகத்தில் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். பரவாலாகவே கடந்த சில வருடங்களாக மாசுபடுதும் மலைகளை அழிக்கும் தொழிற்சாலைகள், விவசாயத்தை அழிக்கும்  ஆழ கிணறுகள், விவசாய நிலங்களை அழிக்கும் நெடும்சாலைகள்,   என்று அனைத்து தமிழக மக்கலாகவே முன்னெடுக்கும் போராட்டங்களும் இயற்க்கை வளங்களை பாதுகாப்பதாகவே உள்ளது. இந்த சூழலில், இன்னமும், மாசு படுதும் தொழிற்சாலை எல்லாம் வேண்டாமென்றால், தமிழகம் "சுடுகாடாக மாறிவிடும்" என்று அறிக்கை விடுபவர் இங்கு அரசியல் செய்ய தலைமை  தேவை என்று யாரும் விரும்பவில்லை.   

சென்னை மற்றும் இமாலயம் தவிர இதர படப்பிடிப்பு இடங்களைத் தவிர, தமிழகத்தில் வேறு என்று ஒரு இடத்திற்க்கும் தொடர்ந்து ரஜினிகாந்த் சென்றுள்ளாரா என்பதும், இயற்கை வளங்கள் இங்கு எந்த அளவிர்க்கு மாற்றம் அடைந்துள்ளது என்பதற்க்கு அவருக்கு அனுபவரீதியில் தெரிய வாய்ப்பிருக்கிறதா என்பது கேள்விக்குறியது. சரி அனுபவம் இருக்க அனைவருக்கும் வாய்ப்பில்லை, அவருக்கு அனுபவம் மிகுந்தவர்கள் பரவலாக அனைத்து துறைகளிலும் உள்ளனரா, என்பதும் கேள்விக்குறியே, அப்படி உள்ளவர்கள் சொல்லுவதை அவர் கேட்பாரா என்றால், அது எனக்கு மிகப்பெரிய சந்தேகத்தை கொடுக்கிறது. 'பெரியவர்கள்' என்று இவர் மதிக்கும் பலரும் இப்போது இல்லை. இவரே இவரை சுற்றியுள்ள வட்டத்தில் 'அனைத்தும் அறிந்த பெரியவர்' என்கின்ற நிலயில்தான் இவர் இந்த களம் இறங்குகிறார்.  
 
#2: அரசியல் அமைப்பில் மாநிலங்களுக்கு என்று சில பொருப்புகளும், உள்ளாட்சிகளுக்கு என்று மற்ற சில பொருப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போதய நடுவண் அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனை, பெரும்பாலான வியாபார நோக்கு கொண்ட துறைகளில்,  தகவல் தொழில் நுட்பத்தைக் கொண்டு, ஒட்டுமொத்த மாநில பொருப்புகளையும், பல்வேறு மசோதாக்களை கொண்டு நீர்க்க செய்து முழுக்க தங்கள் வசம் கைப்படுத்த முனைவது. இது இந்தய அரசியல் அமைப்பை முற்றிலும் மாறி அமைக்கவல்ல ஒரு போக்கு. சிலர் (என்னையும் சேர்த்துதான்), இவர்களது இந்த போக்கு, இந்தியா அரசியல் சாசனத்தை மாற்றும் முயற்சியாகவே பார்கின்றனர். அரசியல் பொருப்பனைத்தும் மையப்படுத்தும் போக்கு ஒரு சர்வாதிகார போக்கு, இதனை கண்டிக்கின்றவர் அனைவரையும், "வளர்ச்சிக்கு எதிராளி", "நாட்டின் எதிராளி", "நாட்டை கெடுப்பவர்கள்", என்று வெறும் வாய்ஜாலம் செய்தும், சில இடங்களில் வன்முறை செய்தும், இவர்களது கட்சியை சேர்ந்தவர்கள் ஆதரிக்கின்றனர். இத்தகைய ஆதரவு முதல் வெளிப்பாடாக     இணைதளங்களில் வருவதால் இந்த ஆதரவாளர்கள் உண்மை மனிதர்களா, அல்லது வெறும் மசீனா என்று கூட நமக்கு தெரிவதில்லை. அதேபோல், இவர்களது ஆதரவாளர்கள் பலரும் இந்த நாட்டு பிராஜயே இல்லை, வேறு நாட்டில் தஞ்சம் புகுந்த இந்தியர்கள் மத்தியில் தான் மிகவும் வலிமையான மனிதர் என்று அவ்வப்போது சென்று அவர்கள் மத்தியில் கூட்டம் போட்டு ஒரு மாயாயை ஏற்படுத்தி, அந்த மாயயைக் கொண்டு அவர்களை தன்னுடைய பலத்தை இணயத்தின் மூலம் இந்தியர்களுக்கு இலவசமாக மீண்டும் உரைக்க செய்துள்ளது ஒரு விதத்தில் மோடியின்  ரிவர்ஸ் bpo வணிகத் தந்திரம்  என்று சொல்லலாம். 
இப்போதுள்ள மாநில அரசு நடுவண் அரசாங்கத்தின் இந்த போக்கை கண்டிக்க கொஞ்சமும் முயற்சி எடுக்காதது நமக்கு வந்த மிகப்பெரிய இரண்டாவது சாபக்கேடு. ஆனால் இவர்கள் இங்குள்ள உள்ளாட்சிகளை நடத்தும் விதம் இத்தகைய அதிகாரப் பொறுப்பை மைய்யப் படுதுதல் இவர்களுக்கும் உடந்தையே என்று தோன்றுகிறது. ஆனால் எந்த ஒரு அரசியல் அமைப்பு சார்ந்த விஷயங்களை ஆழ்த்து யோசிக்கும் திறன் இவர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை ஏநோ ஒப்புக்கொள்ள மனம் வரவிலை.  

நான் பார்த்த அளவில், "என்னுடைய மனசாட்சியைத் தவிர நான் யார் சொல்வதையும் கேட்கமாட்டேன்" என்னும் முடிவெடுக்கும் போக்கையே ரஜினிகாந்த் தன்னுடைய திரைபட துறை வாழ்க்கை முழுவதும் கொண்டுள்ளார். ஒரு ஹீரோவின் வாழ்க்கையில் இத்தகைய முடிவெடுக்கும் முறை, வணிகத்தில் பல கோடிகள் செலவு செய்பவர்களுக்கு, "இவர் இப்படித்தான்" என்று நிலைப்புத் தன்மையை ஏற்படுத்தி தனக்கென உள்ள எளிமையுடன் இவருடைய தனிததுவத்தை நிலை நிறுத்த உதவியுள்ளது. ஆனால் அரசியல் தளத்தில் இது ஒரு சர்வாதிகாரபோக்கு. இந்தியா அரசியல் அமைப்புக்கு இத்தகைய முடிவெடுக்கும் தலைமை, மேலும் மக்கள் ஆட்சியை நீரதுப் போகச் செய்யும் அளவிலேயே நிறுத்தும் என்பதே என்னுடைய கணிப்பு. 

இதனால் தான், தற்போதைய நடுவண் அரசாங்கம் இவருடைய அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறது. இந்துதவம் அவர்களது கேடையம், அனைத்து வர்த்தக மையப்படுத்துதல் அவர்களது உண்மை நோக்கம்.  குடியுரிமை சட்டத்தின் கீழ் அமைக்கப் படும், "பாதுகாப்பு குடியிருப்புகள்" (அசாமில் இப்பொழுதே கட்டிமுடிக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன), இரண்டாம் தர 'குடி'களை  எந்தஒரு அரசியல் மற்றும் சட்ட இடையூறுகள் இல்லாமல் வெறும் அடிமை தொழிற்சாலை கூலிகளாக மாற்றும் முயற்சி என்பதை நான் திடமாக நம்புகிறேன். இதற்க்கு சீனா இவர்களுக்கு முன்மாதிரி. இவர்களது 'அறிவு ஜீவிகள்' பலரும் என்றும் தொடர்ந்து ஒப்பிடுவது, "நாம் சீனாவைப் போல இல்லை" என்பதுதான். கம்யூனிஸ்டும் இவர்களை எதிர்க்காத விஷயம், "சீனாவைப்போல" என்னும் மடத்தனதில்தான்.  எப்படி அமெரிக்க ஒரு நோய் கொண்ட மேற்கத்திய அரைகுறை  நாகரீகத்தி உச்ச வெளிப்பாடோ, அதேபோல் சீனா ஒரு கம்யூனிசத்தின் அடிப்படை அரைகுறை  சித்தாந்த உச்சவெளிப்பாடு.  இத்தகைய அரசியல் சிந்தனை வெள்ளிப்படுதான் caa போன்ற அரசியல் குடியுரிமை  மாற்றங்கள், இவற்றை ரஜினிகாந்த் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல்  ஆதரிக்கிறார் என்றால், இவருடைய புரித்தாலில் நமக்கு சந்தேகம் ஏற்படுவது இயல்பு.  

#3: நமது மா நிலத்தின் இன்றய முதல் சாபக்கேடு ஊரிப்போன ஊழல் அரசாங்க கட்டமைப்பு. இதனை எதிர்க்கின்ற நோக்கும், அதற்கான வழிமுறையும் இல்லாத எந்த ஒரு அரசியல் கட்சியையும் அடுத்தாண்டு தேர்தலில் நாம் தவர்க்க வேண்டும். இன்றுள்ள ஆட்சியாளர்களும் சரி இவர்களை எதிர்க்கும் முதல் கட்சியும் சரி, இருவரும் இந்தவிஷயத்தில் ஒன்றே. மக்கள் முன் நின்று ஊழலை எதிர்த்து பேசும் தார்மீக அதிகாரத்தை தமிழகத்தில் இந்த கட்சிகளின், மற்றும் இவர்களை ஆதரிக்கும் இதர கட்சிகளின்  எந்த ஒரு மேடையிலேயும் காண முடியாது. அப்படிப்பட்ட காட்சிகளை ஆதரிப்பவர்கள், இந்த ஊழல் அரசாங்கத்தின் கூட்டாளிகள் என்றே நாம் கொள்ள வேண்டும். 

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் செய்தால் இவர்களில் பலரும் அவருக்கு ஆதரவாக கட்சி மாறுவார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. அ. இ. அ. தி. மு. க. நிச்சயமாக பிளவுபடும், இவருக்கு இப்பொழுதே அத்தகைய நபர்கள்தான் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இவருடைய ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் இத்தகைய அரசியல் அனுபவஸ்தர்கள் வருகையுடன், ஒத்துக்கப்படுவார்கள். அதனால் இவர் அரசியலுக்கு வந்தால், மேடைகளில் வேண்டுமானால், "நான் ஊழல் செய்ய அரசியலுக்கு வரல" என்று இவர் மாததிரம் கூறலாம், ஆனால் இவரை சுற்றி இருப்பவர்கள் அப்படி இருப்பார்கள் என்பதற்க்கு தற்போது எந்த ஒரு அறிகுறியும் தென்பட வில்லை. 

 
இவை மூன்றும் தாண்டி எனக்கு தனிப்பட்ட அளவில் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தில்  ஒரு மிகப்பெரிய இடர் தெரிகிறது. தன்னை ஒரு "ஆன்மிகவாதி" என்று எடுத்தவுடன் அவர் முன்வைப்பது, அவரது பிம்பத்தை அவர் முதலில் தாங்குவார் என்பதே காட்டுகிறது. "தமிழகத்தில் தலைமையில் வெற்றிடம் இருக்கிறது" அதனால் நான் அரசியலுக்கு வருகிறேன், என்பது ஒரு வாய்பை காட்டி, அதனை தவரவிடக்கூடாது என்னும் நிலையை தெரிவிக்கிறது.அது தவறில்லை. ஆனால், "நான் இப்படித்தான்" என்று துவங்கும் அரசியல் வாழ்க்கை, திரைப்படத்தில் நன்றாக இருக்கலாம், ஆனால் நிதர்சனத்திரக்கு எந்த அளவு சரி என்று தெரியவில்லை. என்னுடைய கணிப்பு இது சரிவராது என்றே தோன்றுகிறது. தமிழகத்தில், அவரவர் மத்ததில், ஜாதியில் ஊறியிருந்தாலும்  பொது தளத்தில், "ஜாதிக்கு எதிர்ப்பு, அனைத்து  மததிற்கு மரியாதை" என்று பிம்பம் மிகாயாகவே உள்ளது. மற்றும், நாத்திகம் இங்கு ஒரு பாஷன், கம்யூனிசம் மற்றொரு பாஷன், இவற்றின் மத்தியில் இவர் எடுத்தவுடன் முன்னிறுத்தும் பிம்பம் பலரையும் அவர்களுடைய பிம்பத்திலிருந்து வெளிவந்து இவருடன் கைகோர்க்க தடையாய் அமையும்.  அப்படி கைகோர்க்க வருபவர், இன்றைய இந்துத்வா பேசும், உலகமயமாக்கப்பட்ட பொருளாதார அளவில் மேற்கத்திய நாகரீகத்தை சார்ந்தும், வாழ்க்கை முறையில் சடங்குகளையும், மூட நம்பிக்கைகளையும்  பின்பற்றி அதனை மதம் என்று நம்பும் நடுத்தர  வர்க்கம், அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி.  இவர்களுடன் கைகோர்த்து அரசியல் செய்ய இன்று இவர் வரவேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்காகவே ஒரு கட்சி நாட்டில் இருக்கிறது, அந்த கட்சி தமிழகத்தில் நுழைவாதற்க்கு ரஜினிகாந்த் ஏதுவாக இருப்பார் என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்கும் இந்த மனிதரை நம்பி எந்த அளவிர்க்கு முன்னேறலாம் என்று தெரியாது, காய் நகர்த்துவது போல இவரை முன்னிறுத்தி தங்களது ஆட்களை இவரது முயற்சியில் முழுவதுமாக ஆகிறமிக்க செய்து, விரைவில் இவரது கட்சியை முழுவதுமாகவே அபகரிது விடுவார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. 

  
ஆன்மீகம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது இருப்பதே நல்லது. மதம் சார்ந்த அரசியல் உலக அளவில் இன்று விஸ்தரிக்கப்பட்டு, வர்த்தகதுக்கு தடையில்லாமல், வர்த்தகத்தை வளர்க்கும் விதத்தில் தன்னை அமைத்துக் கொண்டுள்ளது.  இதனால் அறம் சார்ந்த வாழ்க்கை நோக்கி பயணிக்கிறவர்கள் பலரும் ஆன்மிக சிந்தனை அடைக்கலமும் நம்பிக்கையும் அளிக்கிறது. மதத்தையும் ஆன்மீகத்தையும் பிரித்து பார்க்கும் மரபு இந்தியாவில் மிகவும் பழமையான ஒன்று. அதனாலேயே ஆன்மீகம் சார்ந்த தேடலுடன் பலரும் இங்கு இன்றும் வந்தவண்ணம் இருக்கின்றனர். நமது திருவண்ணாமலையும், சித்தர் பீடங்களும்,  நந்தவனங்களும், குன்றுகளும், சமண குகைகளும், இன்றும் நமக்கு ஆறுதலும் மாற்று சிந்தனைக்கு வழியும் தருகின்றன.   இப்போது இவர் ஆன்மிக அரசியல் இப்படிதான் இருக்கும் என்று ஆரம்பித்தால், நூறாண்டுகள் கழித்து, இந்த காலகட்டதை படிக்கும் மக்கள், நமது ஒட்டுமொத்த ஆன்மீக புரிதலும் இவ்வளவுதானா என்று தவறாக எடைபோட வாய்ப்புள்ளது. 

Comments

Popular Posts