தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் நிலை...
தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியில் உட் கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நாளை (அதாவது 21/06/2014) அன்று ஒரு "போராட்டம்" நடத்த இருப்பதாக இன்று ஒரு குறும் செய்தியும் (SMS), மற்றும் சமூக வலைதளங்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்சியின் கொள்கைக்கு என்றும் ஆதரவாக இருக்கும் நான், இந்த கட்சியின் தேசிய அளவிலானா தடுமாற்றத்தை கண்டு வருதபட்டுள்ளேன். தமிழக அளவில் உறுப்பினர் என்கின்ற முறையிலும், சிறிது காலம், ஒரு சிறிய பொறுப்பு வகித்ததின் காரணமாகவும், தமிழகத்தில் 'வளர்ச்சி' துறையில் 16 ஆண்டுகளாக தொடர்ந்து சிறு பங்கு வகிக்கும் காரணத்தினாலும், பின்வரும் பதிவு. இந்த பதிவை என்னுடைய தனிப்பட்ட கருத்தாகவே வெளியிடுகின்றேன், இதற்கும் கட்சியின் எந்த 'குழு' விற்கும் எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லை. இதனை நான் எந்தவித தனிப்பட்ட எதிர்பார்ப்புடனும் எழுதவில்லை.
எனக்கு தெரிந்தவரையில் -
1. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு நேர்மையான விதத்தில் உறுப்பினர் சேர்க்கை மீண்டும் நடத்தப்படவேண்டும். கடந்த காலத்தில் "உறுப்பினர் சேர்க்கை படிவம்" எவ்வளவு விநியோகிக்கப்பட்டுள்ளது என்பதை மாத்திரம் எண்ணி, 3 லட்சம் உருப்பினர்கள் உள்ளார்கள் என்று சொல்லுவதை நிறுத்தவேண்டும்.
2. தமிழகத்தில் ஆம் ஆத்மியின் வலு சில மாவட்டங்களில் மாத்திரம்தான் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
3. எங்கெல்லாம் கொஞ்சம் வலு உள்ளதோ, அங்கு மாத்திரம் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்று சேர்த்து, அடிமட்ட அளவிலான சில மக்கள் பணி செய்தல் அவசியம்.
4. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி ஒரு "இளைஞர் கட்சி" யாக உருவெடுக்க வேண்டும். பெரும்பாலான தமிழக கட்சிகளின் இன்றைய தலைவர்களின் சராசரி வயது 60 க்கு மேல். இதனை ஆம் ஆத்மி கட்சி மாத்திரமே உடைக்க முடியும். கட்சியின் அடுத்த 10 ஆண்டுகளில், இன்று 30 வயதுக்கு உட்பட்டவர்களை தலைவர்களாக நோக்குதல் அவசியம்.
5. இங்கு உள்ள கழக கட்சிகளின் ஆதிக்கத்தை எதிர்த்து மற்றொரு அணி உருவாக்கவேண்டும் என்று இன்று செயல்பட துவங்கினால், இன்னும் 10 வருடங்களாவது வேலை செய்வது அவசியம். ஆதலால், இன்று 10 வருடம் தங்கள் நேரத்தை அளிக்க தயாராக உள்ள இளைஞர்களை கண்டுபிடித்து, அவர்களை வருங்கால தலைவர்களாக பகிரங்கமாக அறிவித்து, அந்த தலைமை பொறுப்பை ஏற்ப்பதர்க்கு அவர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்தல் அவசியம். இன்று அரசியல் அனுபவம் வாய்ந்த மக்கள் பணியில் தங்களை அர்பணிதுக்கொண்ட பலரது நட்பும், அனுபவமும் கட்சிக்கு கிடைத்துள்ளது. இத்தகைய நபர்களை கட்சி "வழிகாட்டிகளாக" பாவித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க மட்டும் பயன்படுத்தவேண்டும்.
6. அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் பங்குகொள்ளுவதில்லை என்று பகிரங்கமாக முடிவு எடுக்க வேண்டும் (அல்லது எங்கே வலு உள்ளதோ அங்கு மாத்திரமே போட்டியிடுவோம் என்றாவது முடிவு எடுக்கவேண்டும்). அடுத்த 5 ஆண்டுகள், வெறும் கட்சியை வளர்க்கும் பணியில் மாத்திரமே கவனம் செலுத்த இது உதவும். இல்லையேல் இன்னமும் தேவையில்லாமால் அவமானப்படவும், கேலிப்போருளாகவுமே வழிகோலும்.
7. உறுப்பினர்களை கொண்டு அடிமட்ட அளவிலான "மக்கள்பணி" செய்வதை குறிக்கோளாக கொள்ளுதல் அவசியம். இன்று பெரும்வாரியான மக்கள் ஆம் ஆத்மி என்றாலே, ஏதோ வெறும் 'போராட்ட' அரசியல் கட்சி என்றே எண்ணுகின்றார்கள். இந்த நிலை மாறுவதற்கு அதிக அளவு களப்பணி அவசியம். இன்றைய தமிழக முக்கியமான கட்சிகளான கழகங்கள் தங்கள் அடிமட்ட தொண்டர்களின் களப்பணியின் அர்பணிப்பினால் ஏற்படுத்தப்பட்டவை என்பதை நாம் மறக்க இயலாது. இன்று அவற்றின் நிலை வேறு என்பது நாம் அறிந்ததே, ஆனாலும், இன்றும் தமிழகத்தில் "எம்.ஜி. ஆர்."க்கு, குடும்ப கடன்பட்டதை போல் மக்கள் வோட்டு போடுவதை நாம் காண்கின்றோம்.
8. அடுத்த 15 ஆண்டுகளில், தமிழகத்தில் என்ன "மக்கள்பணி" செய்யவேண்டும் என்பது இன்றைய நிலை வைத்தே சொல்லிவிடலாம் - இயற்க்கை வாழ்வாதாரங்களை பராமரித்தல், பாதுகாத்தல், வேளாண்மையை இயற்கை முறைக்கு மாற்றி அமைத்தல், உள்ளூர் தொழில்களை ஊக்குவித்தல், சூரிய மற்றும் இதர இயற்கை சக்திகளை கொண்டு மின்சாரம் தயாரித்தல், கிராமங்களை மீண்டும் வட்டார கலாசார மற்றும் கல்வி மையங்களாக மாற்றி அமைத்தல், கிராமத்து பஞ்சாயத்துகளை வலுவாக்குதல், மக்களுக்கு சென்றடையவேண்டிய அனைத்து அரசாங்க சலுகைகளையும் ஊழலற்ற விதத்தில் மக்களிடம் சேர்பித்தல், தமிழை நமது மக்கள் மறவாதிருக்க அனைத்து அளவிலும், தமிழ் கூத்து, நாடகம், கலை, கவிதை, கதை ரசனையை வளர்த்தல், இதனைக்கொண்டு மக்கள் மத்தியில் குறுகிவரும் சமூக சிந்தனையை மீண்டும் விரிவாக்குதல், தமிழன் என்னும் உணர்ச்சிக்கு ஒரு பெருமை சேர்க்கும் identity ஏற்படுத்துதல் அவசியமாகின்றது, எளிமையான வாழ்க்கையையும், சுதந்திரமான சிந்தனையும், நுகர்வு கலாசாரத்தை தவிர்க்கும் வாழ்க்கையை தமிழகத்தில் மீட்டெடுக்க வேண்டும் ...இவை எனக்கு தெரிந்த அளவில் தமிழகத்திற்கு நிச்சியமாக செய்யவேண்டிய பணிகள்.
9. தமிழகத்தில் என்றுமே சினிமாகாரர்களின் ஆதிக்கம் மக்கள் மனதில் அதிகம். இது அடுத்த 10 ஆண்டுகளில் தொடரும் என்றே தோன்றுகிறது. தமிழ் சினிமா காரர்கள் பலரும் ஆம் ஆத்மியில் சேருவதற்கு தயாராய் ஒரு கட்டத்தில் இருந்தனர். இவர்களில் நேர்மையானவர்களை, இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ஒரு அந்தஸ்து அளிப்பதன்மூலம் கட்சி தேவையில்லாமல் விளம்பரத்திற்கு அலைவதை நிறுத்தலாம். இதை தவிர கட்சியில் பல பிரபலங்கள் இணைய, செயல்பட வாய்ப்பு அளிப்பது முக்கியம்.
10. இவை எல்லாம் செவ்வனே நிகழவேண்டும் என்றால் சிறிது காலமேனும் இந்த கட்சி தமிழக உருப்பினர்கள், "போராட்டம்" என்கின்ற பெயரால், ஊடங்கங்களில் இடம் பிடிக்க போட்டியிடுவதை நிறுத்தவேண்டும். தமிழகத்தில் ஊடகங்களில் கட்சிசார்பு வெட்ட மக்கள் வெளிச்சமாக கடந்த தேர்தலில் உணர்ந்தபின்னும், இத்தகைய தேவையில்லா வேலைகளை செய்தல் அனாவசியமாகவே எனக்கு படுகின்றது.
இன்று கட்சியில் யாருடைய ஆதிக்கமோ அல்லது ஆக்கிரமிப்பும் இல்லை என்றே கூறலாம். ஆனால், பலரும் இதற்க்கு முயற்சிப்பது உண்மை. தேசிய அளவில் யாரேனும் வந்து தமிழக ஆம் ஆத்மியை காப்பாற்றுவார்கள் என்று நினைப்பது வெகுளித்தனம். தமிழகத்திலிருந்து சில குழுக்கள் தொடர்ந்து டில்லிக்கு தூது விட்டுகொண்டிருக்கின்றன. இவர்கள் தங்கள் நிலையை மேம்படுத்தவும், மற்றவரை கீழ்த்தரமாக சித்தரிக்கவும் தேவயில்லாத பல கற்பனைகளில் நேரத்தை வீணடித்து வருகின்றார்கள். இதைவிட தமிழகத்தில் சீராக, சிறிதாக ஏதேனும் உண்மை வேலைகளை செய்தால், தேசிய அளவில் ஆம் ஆத்மிக்கு அது ஒரு வழிகாட்டியாக அமையவும் வாய்ப்புள்ளதை இவர்கள் ஏனோ புரிந்துகொள்ளவில்லை.
உட்கட்சி தேர்தல் இந்த கட்டத்தில் யாரை கொண்டு நடத்துவார்கள்? என்னும் கேள்வி எழுகின்றது. இன்றைய நிலையில் மிக சிறு தொகுதிகளிலேயே ஆம் ஆத்மிக்கு 10க்கு மேற்பட்ட தொடர்ந்து ஆதரவளிக்கும் தொண்டர்கள் இருகின்றார்கள். இவர்கள் பலரும் எந்தவிதமான பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் வேலை செய்பவர்கள். இவர்கள் மத்தியில் உட்கட்சி தேர்தல் நடத்துவது அனாவசியம்.
ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய அளவிலும், தமிழக அளவிலும் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கின்றது என்று நான் நம்புகின்றேன். அதே சமயத்தில் இன்றைய அரசியல் அணுகுமுறைகளையும், யுக்திகளையும் கொண்டு அதனை சாதிக்க இயலும் என்று நான் நம்பவில்லை. அரசியல் கலாசாரத்தில் மறந்துபோன கண்ணியங்களையும், மறத்துப்போன மக்கள் தேவைகளையும் முன்னிறுத்தி வந்த ஒரு கட்சி இன்றைய அரசியல் சூழலிலிருந்து ஒவ்வொரு அளவிலும் மாறுபட்டு நிற்க்கவேண்டியது அவசியம்.
அதற்க்கு, தீர்க்க சிந்தனை, சிந்திக்க அவகாசம், தன்னலமில்லா தொண்டர்கள், கொள்கையில் பிடிப்புகொண்ட, வாழ்க்கைகொண்ட பெரியவர்களின் உண்மை நட்பும், பொறுமையும் கொண்ட, இளைய படையும், தலைமையும் தேவை. இருக்கின்றது என்று நான் நம்புகின்றேன்.
Comments