தமிழகத்தில் பா. ஜ. க. எடுபடுமா?
பா.ஜ.க. ஒரு மதவாத கட்சி என்று பெரும்பாலானோர் நம்புகின்றோம்.
இதனாலேயே, நாத்திகவாத அடிப்படைகொண்ட திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கொண்டுள்ள தமிழகத்தில் இந்த கட்சியின் புதிய பிரவேச முயற்சி, வரலாற்று ரீதியில் முக்கியமாக நோக்கவேண்டிய ஒன்றாகின்றது. தமிழகத்தில், அரசியல் தளத்தில் இந்து மதத்தை ஜாதி அடிப்படயிலேலே இந்த நாள் வரை அரசியல்வாதிகள் பாராட்டி வருகின்றனர். இஸ்லாமியத்தையும், கிருஸ்துவ மதத்தையும், மத அளவில் அங்கீகரித்து, அந்த மதவாதிகளுடன் கூட்டு வைக்க என்றும் தயங்காத தமிழக கட்சிகள், இந்து மதத்தை சார்ந்த எந்த அமைப்பையும் அவ்வாறு அன்கீகரிக்கவில்லை.
தமிழகத்தில் நாத்திகவாதம் என்றுமே மத த்வேஷமாக மாத்திரமே செயல்பட்டு வந்துள்ளது. தற்காலத்தில் இந்த நாத்திகவாதம் பேசும் எந்த தலைவரும், ஜாதிகளை கடந்து, சடங்குகளை துறந்து தங்கள் அரசியலை நடத்த தைரியமில்லாமல் இருந்துவருவது நாம் அறிந்ததே. இந்த பின்னணணியில், இந்திய (ஹிந்து) ஜாதிகளின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக தன்னை சித்தரித்து கொண்டுள்ள, பா.ஜ.க. வெறும் பேச்சளவில் ஜாதிகளை சாடி, செயலளவில் அவற்றை பராமரிக்கும் திராவிட கட்சிகளின் மேலோட்ட அரசியலுக்கு ஒரு சவாலாக விளங்கலாம். ஆனால், ஜாதிகளை பகிரங்கமாக ஆதரித்து, ஜாதி அடிப்படையிலான தமிழக கட்சிகள் மற்றும், குழுக்களை தன்வசம் இழுக்கும் அளவிற்கு எந்த ஒரு தமிழக பா.ஜ.க. தலைவருக்கும் தைரியம் வரும் என்று நன் நம்பவில்லை.
தமிழகத்தின் மற்றொரு முக்கிய அரசியல் கலாசாரம், வன்முறை. வன்முறையை தங்கள் கோழைத்தனத்தை மறைக்கவே பெரும்பாலான கட்சிகள் உபயோகிக்கின்றன. அந்த வகையில் பா. ஜ. க. வன்முறை பாராட்டக்கூடிய கட்சியாகவே தன்னை சித்தரித்து வந்துள்ளதினால், அந்த அளவிலும் அவர்களுக்கு சங்கடங்கள் ஏதும் இராது என்றே தோன்றுகின்றது.
ஆனால், தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகவே எந்த தேசிய கட்சியும் தனிபெரும்பான்மை பெறுவதற்கு சாதியமில்லாமலே இருந்துவருகின்றது. இராஜாஜி, காமராஜ், போன்ற மாபெரும் தமிழகத்தை சேர்ந்த தலைவர்கள் தேசிய கட்சியில் இருந்த பொழுதுதான், அந்த கட்சியும் அங்கீகாரம் பெற்றது. இது முக்கியமாக தமிழகத்தில் தங்கள் தளங்களை அமைக்க முயலும் எந்த தேசிய கட்சியும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான வரலாற்று உண்மை.
ஆம் ஆத்மி கட்சியும், தமிழகத்தில் தங்கள் நுழைவு வாய்ப்பை நழுவ விட்டதற்கு, தமிழகத்தில் தேசிய அளவில் தலைவர்களை கண்டெடுக்கவும் அவர்களை ஆதரிக்கவும் அந்த கட்சியின் தலைமை தவறியதே காரணம் என்றே நான் நினைக்கின்றேன். வெறும் 'ஆமாம் சாமி' போடுபவர்களை கொண்டு தமிழகத்தில் எந்த தேசிய கட்சியும் முன்னேரவோ, தளம் அமைக்கவோ இயலாது.
பா.ஜ.க. அத்தகைய தலைவர்களை தமிழகத்தில், மோடியின் ஆட்சியின் கீழ் ஏற்படுத்த முயற்ச்சிக்கும் என்று நான் நம்பவில்லை. திரு. மோடி, மற்றும் திரு. அமித் ஷா இருவரும் தங்கள் கட்சியை ஒரு வணிக நிறுவனம் போன்று, தீவிர கண்காணிப்புடனேயே நடத்த முயற்சிப்பார்கள் என்றே அவர்களின் இதுவரை நிர்வாகாகிக்கும் போக்கைகண்டு நம்ப முடிகின்றது. அத்தகைய சந்தர்பத்தில், அவர்கள் தமிழகத்தில் ஒரு வலுவான தலைமையை என்றும் விரும்பமாட்டார்கள் என்றே நம்ப தோன்றுகின்றது. காங்கிரஸ் போலவே, பல குழுக்களை துவக்க வழிவகுத்து, அவற்றின் வேற்றுமையில் தங்கள் நிலையை தக்கவைக்கவே இவர்களும் முயற்சிப்பார் என்றே எனக்கு தற்போது தோன்றுகின்றது.
...
Comments