சிரிச்சிகிட்டே இருங்க, சந்தோஷமா இருங்க...
சிரிச்சிகிட்டே இருங்க, சந்தோஷமா இருங்க... - தமிழகத்தில் என்னை போல் 70களில் வளர்ந்தவர்களுக்கு மாத்திரமே மிகவும் பரிச்சியமாக இந்த சொற்தொடர். இன்று 'வானொலி அண்ணா' என்று அழைக்கப்பட்ட திரு. கூத்தபிரான் மறைந்த செய்தியை கேட்டபொழுது இந்த சொற்கள்தான் எனக்கு ஞாபகம் வந்தது.
இந்துக்களும், முஸ்லிம்களும் பக்கத்துக்கு பக்கத்தில் வேற்றுமை பாறாமல் அமைதியாய் வாழ்ந்த திருவல்லிகேணி அது, ஒரு முட்டு சந்தில், கூட்டு குடும்பத்தில் நாங்கள் 6 குழந்தைகள். மற்றும் தெருவில் வாழ்ந்த இன்னமும் சில குழந்தைகளை சேர்த்தல், ஏறத்தாழ ஒரு முழு கிரிகெட் குழுவே எங்கள் சந்தில் வாழ்ந்தது.
தொலைக்காட்சி இன்னமும் 10 ஆண்டுகளுக்கு வராத சமயமது, வானொலி கேட்பது குழந்தைகளாகிய எங்களுக்கு முக்கியமான நிகழ்சிகள் - இரவில், தேன்கிண்ணம் - நாடகம் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மதியம் வானொலி அண்ணா வழங்கிய, "சிறுவர் பூங்கா" - ஒவ்வொரு வாரமும் யாரேனும் குழந்தைகள் கதை சொல்லுவார்கள், சில பாடல்கள் இருக்கும், அண்ணா சில சமயங்களில் கதை சொல்லுவார்...காலபோக்கில் இந்த நிகழ்ச்சியின் இதர பகுதிகள் மறைந்துபோனாலும், நிகழ்ச்சி முடியும் சமயத்தில் வானொலி அண்ணா தனது இனிய குரலில், "அடுத்த வாரம் இதே நேரத்தில் சந்திப்போம், அதுவரை குழந்தைகள் அனைவரும் சிரிச்சிகிட்டே இருக்கணும், சந்தோஷமா இருக்கணும்" என்று கூறும்பொழுது, உண்மையாகவே மனதளவில் அவரிடம், "நிச்சியமாக அப்படி இருக்க முயற்ச்சிப்போம்" என்று ஒரு விதமான் ஒப்பந்தம் செய்வதைப்போல உணர்வு ஏற்ப்படும். ஏதோ நமக்கு மிகவும் அந்நியோன்னியமானவரை போன்றே அவருடன் அந்த ஒப்பந்தகாலம் இருந்தது என்றால அது மிகையாகாது.
வானொலி மக்களுக்கு மிகவும் நெருங்கி இருந்த காலங்களில், தமிழக வானொலியில் என்றும் மறவாத பல குரல்களில் நிச்சியமாக திரு. கூத்தபிரான் அவர்களுடைய குரல் மிக முக்கியமான ஒன்று. நன்றி, வானொலி அண்ணா. என்றும் உங்கள் குரல் எங்களுடனேயே இருக்கும்...
Comments